நாகர்கோவில், கோட்டாறு கவிமணி அரசு தொடக்க பள்ளிக்கு 8 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர் மேளதாளம் முழங்க சீர்வரிசையாக வழங்கினர். ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பொதுமக்களை அணுகி பள்ளிக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்வது 'கல்வி சீர்வரிசை' என்ற திட்டமாக இருந்து வருகிறது.
பறக்கை, ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் இந்த கல்வி சீர்வரிசை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பொருட்கள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு சேர்க்கப்படுகிறது.
இதனை ஒரு இயக்கமாக கல்வித்துறை நடத்தி வருகிறது. நாகர்கோவில், கோட்டாறு, கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் குறைவு. இந்தநிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் ஒன்றிணைந்து, பள்ளிக்கு தேவையான செயர்கள், ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான பொருட்கள், போர்டுகள், மின்விசிறிகள், குடிநீர் தொட்டி, பக்கெட், கப்புகள், டிரம், பெயின்ட் என ர8 லட்சம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசை இயக்கத்தின் கீழ் வழங்கினர்.
இதனை நாகர்கோவில், கோட்டாறு, குறுந்தெருவில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தட்டுகளில் பழவகைகள், பூக்கள் உட்பட சீர்வரிசை போல பள்ளிக்கு எடுத்து சென்று வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் கலந்து கொண்டு பொருட்களை பெற்றுக் கொண்டார்.
நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகனன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜன், ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலர் மரிய பாக்கியசீலன், பள்ளி தலைமையாசிரியர் கமலம், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Please Comment