மூடப்படவிருந்த பள்ளியை முன்னேற்றிய ஆசிரியர்கள்! கோவை குறிச்சி அரசுப் பள்ளியின் கதை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மூடப்படவிருந்த பள்ளியை முன்னேற்றிய ஆசிரியர்கள்! கோவை குறிச்சி அரசுப் பள்ளியின் கதை

"அரசாங்க முடிவின்படி, இந்தப் அரசுப்பள்ளி மூடப்பட்டிருந்தால் இந்நேரம், இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். அந்தப் பள்ளிக்கூடம் மட்டுமல்ல; பதக்கங்களை வென்று நிற்கும் இந்தப் பிள்ளைகளில் பலர், பாதைமாறிச் சென்றிருப்பார்கள். 

(01) Text and Display (Responsive ads) Thulirkalvi
பலர் தங்கள் திறமையை அறியாமலேயே போயிருப்பார்கள். தடை போடவில்லையெனில் ஓடும் நீர்கூடச் சீறிப் பாயாது' என்பார்கள். இந்தப் பள்ளிக்கூடம் மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டதால்தான், என் பிள்ளைகளில் 120 பேர் மண்டல அளவில் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். என் பிள்ளைகளின் வெற்றி அவர்களுக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை. இந்தப் பள்ளியையும் சேர்த்துக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. ஓர் ஆசிரியைக்குப் பிள்ளைகள் இதைவிட வேறென்ன பெருமையைத் தேடித் தந்துவிட முடியும்?'' தன் பள்ளியின் அத்துணைப் பிள்ளைகளையும் வாரி அணைத்தபடி பேசும் தலைமை ஆசிரியர் சாந்தியின் முகத்தில் அளவில்லாமல் புன்னகை தவழ்வதைக் காண முடிந்தது. அரசுப் பள்ளிகளை ஏதோ, அநாதைக் குழந்தைகளைப்போலப் பாவிப்பவர்கள், 

(01) Text and Display (Responsive ads) Thulirkalvi
கோவை குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியைப் பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். கை நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு, பெஞ்சைத் தேய்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் யாரேனும் இருந்தால், அவர்களும் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் குறித்துக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களைப்போல இல்லை அந்தப் பள்ளி. எந்தக் கறார் நடவடிக்கைகளையும் அங்கே காண முடியவில்லை. 'அம்மா... அம்மா...' என்று வாஞ்சையோடு தன் முந்தானையைப் பிடித்துச் சுற்றும் அளவுக்குச் சுதந்திரம் கொடுத்துப் பிள்ளைகளை, அன்பால் கட்டிப் போட்டிருக்கிறார் தலைமை ஆசிரியர் சாந்தி. அந்தச் சுதந்திரமும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மேல் அவர் வைத்திருக்கும் நேசமும்தான் அங்கு பயிலும் 147 மாணவர்களில் 120 பேர் பதக்கங்களைச் சொந்தமாக்கக் காரணமாக அமைந்தது. ஆம்... பெரும்பாலான அரசுப் பள்ளிகள் என்னவென்றே அறிந்திராத 'டேக்வோண்டோ', 'ஜூடோ', 'கத்திச்சண்டை', 'நீச்சல்' போன்ற விளையாட்டுகளில் மண்டல அளவில் பதக்கங்கள் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து ஜொலிக்கிறார்கள் அதன் மாணவ-மாணவிகள். பள்ளிக்கூடத்துக்கு வராமல் வேலைக்குச் சென்றவர்கள், பள்ளி முடிந்து சென்றதும் குறிச்சி குளத்தில் குதித்து கும்மாளம்போட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது ஜூடோ பிளேயராகவும், நீச்சல் வீரராகவும் மாறி நிற்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்? அந்த ஆச்சர்யம் கலையாமல் தலைமை ஆசிரியை சாந்தியிடம் பேசினோம். 

"எங்கள் பள்ளிக்கூடம் குறிச்சி குளக்கரையில் இருந்தாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் இந்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிவைச் சந்தித்துக்கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், 500-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்றநிலை மாறி, தற்போது வெறும் 147 மாணவர்களே படித்து வருகிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களை மூடப்போவதாக அரசு முடிவெடுத்தபோது, எங்கள் பள்ளியின் மீதும் கத்தி தொங்கியது. நானும் எங்கள் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் மனதளவில் நிறையவே கலங்கிப்போயிட்டோம். 

இந்தப் பள்ளிக்கூடத்தையே நம்பி இருக்கும் பிள்ளைகளின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுந்ததுடன், 'நாம் வேலை செய்யும் பள்ளிக்கூடம் நம் கண்முன்னே மூடப்படுவது, பெற்ற குழந்தை, கண் முன்னே கொல்லப்படுவதற்குச் சமம்' என்கிற எண்ணம் என் தூக்கத்தைக் கெடுத்தது. எங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் 17 பேரும் கூடி ஆலோசனை செய்தோம். இந்தப் பகுதியிலிருந்து வெகுதொலைவில் உள்ள பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பிள்ளைகளையும், அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்துப் பேசினோம். 'எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள்' என மன்றாடினோம். ஆனால், அந்த முயற்சி பெரிதாகப் பலனளிக்கவில்லை. எங்கள் பள்ளிக்கூடத்தை உதாசீனப்படுத்தியவர்களை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். 

எங்கள் பள்ளியைப் பார்த்து அவர்கள் வியக்க வேண்டும் என்று மனசுக்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி நிறைய சப்போர்ட்டிவா இருந்தார். 'ஏதாச்சும் பண்ணுங்க மேடம்னு' எங்களுக்குத் தெம்பூட்டினார். அப்போதுதான், 'நம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளை 'ஸ்போர்ட்ஸில்' பெரிய அளவில் கொண்டு வரலாம் மேடம். நம் பள்ளியைக் காப்பதற்கு அதுதான் சரியானவழி' என நம்பிக்கை வார்த்தைகளைத் தந்தனர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சிவப்பிரகாசமும் நிசாரும். வாடிக் கிடந்தச் செடிக்கு நீரூற்றியதைப்போல இருந்தது அவர்களின் வார்த்தைகளில் இருந்த தீர்க்கம். உடனடியாக, மாணவ-மாணவிகளுக்குப் பயிற்சியைத் தொடங்கினார்கள். 

ஒரே வாரத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக 'அப்சர்வ்' பண்ணி, அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு எது என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆறு மாத காலத்தில் தீவிரப் பயிற்சியின் பலனாக, விளையாட்டைப் பிரதானமாகக் கொண்ட தனியார் பள்ளிகளின் மாணவர்களோடு பல போட்டிகளில் மோதி, பதக்கங்களை அள்ளிக் குவித்தனர் எங்கள் பள்ளி மாணவர்கள். மூடும் நிலையில் முடங்கியிருந்த பள்ளிக்கூடம், தற்போது பாராட்டு மழையில் நனைகிறது. அதேசமயம் படிப்பிலும் மாணவர்கள் யாரும் சோடை போய்விடல்லை. முன்பைவிட நன்றாகவே படிக்கிறார்கள். எங்கள் பள்ளியை உதாசீனப்படுத்தியவர்களுக்கு எங்கள் பள்ளி மாணவர்களின் பதக்கங்களை நாங்கள் அர்ப்பணிப்போம். அடுத்த ஆண்டு பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 

நிச்சயம் அது நடக்கும் அதிகரிக்கும்" என்றார் நம்பிக்கையுடன். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சிவப்பிரகாசம் மற்றும் நிசாரிடம் பேசினோம். "படிப்பு மட்டுமே பிள்ளைகளை உத்வேகப்படுத்தி விடாது. அதுவும் மாணவர்கள் எண்ணிக்கை சொற்பமாக உள்ள பள்ளியில் பிள்ளைகளை 'படி, படி' என்று கண்டிப்பு காட்டி, மார்க் எடுக்க வைப்பது மட்டுமே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. மாணவர்களை ஆசையோடும் ஆர்வத்தோடும் பள்ளிக்கூடத்துக்கு வரச் செய்வதுதான் எங்களுடைய இலக்கு. அதற்குப் படிப்பைத் தாண்டிய ஒரு விஷயம் இங்கு இருக்க வேண்டும்.

 அதற்கு விளையாட்டைவிடச் சிறந்த ஆப்ஷன் வேறு என்ன இருக்கப்போகிறது? இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள், பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வருபவர்கள். புழுதியில் புரண்டு கபடி விளையாடுவதுதான் அவர்களுக்கு உள்ள ஒரே பொழுதுபோக்கு. கூண்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளைவிடவும் இவர்களுக்கு ஸ்டமினா அதிகம். அதை விளையாட்டில் சரியாகப் பயன்படுத்தி ஜூடோ, பென்சிங், டேக்வோண்டோ, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட பயிற்சி அளித்தோம். தேவையான உபகரண வசதிகளை, எங்களுடைய சொந்தப் பணத்தில் முடிந்தளவு வாங்கிக்கொடுத்து பயிற்சி அளித்தோம். இங்குள்ள குளத்தில் நீந்திக்கொண்டிருந்தவர்களை நீச்சல்குளத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்தோம்.
 இதனால், பள்ளிக்கூடத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்ற சில மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கினார்கள். பாதிக்கும் குறைவாக இருந்த வருகைப்பதிவு நூறு சதவிகிதத்தைத் தொட்டது மட்டுமல்ல; பயிற்சி பெற்ற 120 பேரும் மண்டல அளவில் வெள்ளிப்பதக்கங்களை வென்று வந்துள்ளனர். 
ஐந்து மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு, ஓரிரு புள்ளிகளில் தேர்வாக முடியாமல்போனது. என்றாலும், அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம் என்று எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு அணையாத ஒளிக்கீற்று எழுந்துள்ளது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அதுவே, படிப்பின் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்தது. 
இவர்களின் வெற்றி எங்கள் பள்ளியின் மீது வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றனர் வெற்றிக் களிப்புடன். 'இப்படியான அதிசயங்களை விளையாட்டால் மட்டுமே நிகழ்த்த முடியும்' என்று அவர்களின் கருத்தை ஆமோதித்தனர் அங்கு குழுமியிருந்த மாணவர்கள்.

No comments:

Post a Comment

Please Comment