வெளிநாடுகளுக்கு மேல்படிப்பிற்காக செல்லும் இந்திய மாணவர்கள் பதிவு செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் சேர இந்திய மாணவர்கள் தொடர்ந்து அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே பயணித்து, மேற்படிப்பு படிப்போர் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் மற்ற நாட்டுடன் ஒப்பிடும் போது இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்று மேற்படிப்பு தொடர்வதில் முதலிடத்தில் உள்ளனர் என கூறப்பட்டது.
தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
சில நேரங்களில் போலி பல்கலைக்கழங்களில் சேர்ந்து மாணவர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் 129 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தவிர்க்கும் வகையில் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களையும் பதிவு செய்வதை கட்டாயமாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான வரைவு மசோதாவை வெளியுறவுத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டபின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட 18 நாடுகளில் பணிபுரிய செல்வோருக்கு அவசர காலத்தில் உதவும் வகையில் இ-மைக்ரேட்டில் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Please Comment