பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Christina Jasper 


ஏங்க, அந்தப் பிரபலமான ஸ்கூல்ல ரம்யாவோட பொண்ணுக்கு அட்மிஷன் கெடச்சிருச்சாம், 2 லட்சம் டொனேஷன் கேட்டாங்களாம் என்று ரோகினி தன் கணவரிடம் கூறினாள். அதைக்கேட்ட சண்முகம் , இப்பவே 2 லட்சம் -னா, அடுத்த வருஷம் நம்ம பிள்ளைக்கு மூன்று அல்லது நான்கு இலட்சம் கேப்பாங்க போல என்றார். இவை எங்கேயோ நடக்கும் சம்பாஷணை அல்ல. நம் வீட்டில் கூட இதுபோன்ற சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கும். 




 பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும் இந்த மாதங்களில் பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி பார்க்கலாம். முதலில் உங்கள் குழந்தையை எந்த பாடத்திட்டத்தில் சேர்க்க போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும். ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பல பாடத்திட்டங்கள் இருந்தாலும், நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு எடுக்கவும். சிறு வயதில் எந்தப் பாடத்திட்டத்தில் உங்கள் குழந்தையை சேர்க்கிறார்களோ, அதே பாடத்திட்டத்தில் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை படிக்க வைப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து. 





ஏனெனில் முதலில் ஒரு பாடத்திட்டத்தையும், பின்பு சில வருடங்களுக்கு பிறகு வேறொரு பாடத்திட்டத்தையும் அவர்களுக்கு நாம் அளித்தால், அவர்கள் அதை பின்பற்ற கடினமாக எண்ணக்கூடும். எனவே முதலிலேயே எந்தப் பாடத்திட்டம் என்பதை குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கவும். 




நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டத்திற்கு உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை பயன்பாடுகள் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளவும். பின்பு நீங்கள் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்றால், உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள பள்ளிகளை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் நீங்களோ அல்லது உங்கள் உறவினர்களோ குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் வீட்டிற்கு அழைத்து வருவது எளிதாக இருக்கும். நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால், பிள்ளைகள் பள்ளிக்கு அருகில் கூட வாடகைக்கு செல்லலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளியை பற்றி அங்கு பயிலும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் நன்றாக விசாரிக்கவும். 





பள்ளியின் கட்டணங்கள் பற்றியும் கேட்டு, தெரிந்து வைத்துக் கொள்ளவும். டொனேஷன் அதிகமாக கேட்டால் அந்தப் பள்ளி மிகவும் நல்ல பள்ளி என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நம்முடைய வருமானத்திற்கு ஏற்றவாறு பிள்ளைகளின் பள்ளி கட்டணம் இருந்தால் நலமாக இருக்கும். பள்ளியில் கல்வி மட்டுமன்றி பாடம் சாராத செயல்பாடுகளான விளையாட்டு, இசை, NSS மற்றும் நடனம் போன்ற பலவகையான செயல்பாடுகள் இருக்கின்றனவா என்று நன்றாக விசாரித்து கொள்ளவும். 




எல்லா குழந்தைகளுமே, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட திறமைகள் இருக்கும். அவை என்னவென்று பெற்றோர்கள்தான் கண்டறிய வேண்டும். சிறுவயதிலேயே அவர்களின் ஆர்வத்தை கண்டறிந்து, அந்த செயல்பாடு உள்ள பள்ளிகளில் அவர்களை சேர்த்து விடுவது என்பது மிகவும் நல்ல விஷயம். எல்லாக் குழந்தைகளும் முதல் ரேங்க் எடுக்க முடியாது. சிலருக்கு இசை ஞானம் இருக்கும், சிலருக்கு நடனத்தில் ஆர்வம் இருக்கும். எனவே அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் பள்ளியை தேர்ந்தெடுப்பது நல்லது. பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளதா? கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மையாக உள்ளதா என்பதையும் கவனிக்கவும். 





பள்ளியில் வாகன வசதி உள்ளதா? என்றும் அதற்கேற்றவாறு வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் கவனிக்கவும். பள்ளியில் நூலக வசதி இருத்தல் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பது அத்தியாவசியமானது. எனவே அவற்றை ஊக்குவிக்கும் பள்ளியாக இருக்க வேண்டும். பள்ளியின் நேரம் உங்களின் வேலை நேரத்திற்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் மனதில் கொண்டு செயல்படவும். பள்ளி வளாகத்தில் சிறிதளவாவது மரங்கள் இருத்தல் நல்லது. 





அவை குழந்தைகளுக்கு நல்ல புத்துணர்வான உணர்வுகளை அளிக்கும். இலட்சம், இலட்சமாக கட்டணம் செலுத்தினால் தான் நல்ல பள்ளி, அப்பொழுதுதான் நன்றாக கற்றுக் கொடுப்பார்கள் என்ற எண்ணம் சரியானதல்ல. மேலும் நம்முடைய வருமானத்திற்கு ஏற்ற பள்ளியாக இருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக எல்கேஜி வகுப்பிற்கு 50000 ரூபாய் கட்டணம் என்றால், நம்முடைய பிள்ளைகள் ஆறாம் வகுப்பிற்கு போகும்போது அந்த கட்டணம் 80000 ரூபாயாக மாறும். எனவே உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை அளிக்க இயலுமா? என்பதையும் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. 





பள்ளியை தேர்ந்தெடுப்பதில் கணவனும், மனைவியும் இருவரும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவது குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கு நன்மை பயப்பதாக இருக்கும். இந்தப் பதிவில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய கருத்துக்களை பற்றி பகிர்ந்து கொள்ளவும். நன்றி. குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று, அவர்கள் விரும்பிய துறையில் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment