ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு செய்யும் என, அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை திமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.
அப்போது, நடந்த விவாதம்:-
தங்கம் தென்னரசு: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டதுடன், காவல் துறை சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அவற்றைத் திரும்பப் பெற்று முதல்வர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், 4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்திய போது, நீதிமன்றங்களால் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 656 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment
Please Comment