வீடுகள் கட்ட புதிய விதிகள்: முதல்வர் வெளியிட்டார் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வீடுகள் கட்ட புதிய விதிகள்: முதல்வர் வெளியிட்டார்

`தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் - 2019' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு விதிகளானது, மனைப்பிரிவுகளை நெறிமுறைப்படுத்தவும், கட்டிடங்களின் அமைப்பு, உயரம், கட்டுமான பரப்பு, வடிவமைப்பு உள்ளிட்ட கட்டுமானம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தி, முறையான திட்டமிட்ட இருப்பிடங்கள் அமைவதற்கு உதவுகின்றன. 






தற்போது தமிழ்நாட்டில், மனைப்பிரிவு மற்றும் கட்டிடத்திற்கு தேவையான அனுமதி பெறுவதற்கான விதிகள், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் 1971, சென்னை மாநகராட்சி சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் பிற மாநகராட்சிகளுக்கான சட்டங்களில் தனித்தனியாக உள்ளன. இந்த விதிகளை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்து, அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்-2019 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டுவசதியை அனைவரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், வீடு கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் தளப்பரப்பளவு உயர்த்தப்பட்டுள்ளது. 




மேலும், பக்க இடைவெளிகள் குறைக்கப்பட்டு, கட்டிடத்தின் உயரமும், தளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அவைகளை தவிர்க்கும் வகையிலும் இந்த பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறைகள் எளிமையாக்கப்பட்டு, விரைவில் கட்டிட அனுமதி அளிக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆகிய துறைகளால் தயாரிக்கப்பட்ட `தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் - 2019' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். 15 புதிய `102' தாய் சேய் நல வாகனம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சேய்களை அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல, ரூ.1 கோடியே 65 லட்சம் செலவிலான 15 புதிய '102' தாய் சேய் நல வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 72 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள் / விரிவுரையாளர் நிலை-II பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். 





தாம்பரம் அரசு மருத்துவமனை செவிலியர் டி.பால்செல்விக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த மின் விபத்தில் இரண்டு கைகளை இழந்த ஏழை கட்டிட தொழிலாளி நாராயணசாமிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மூலமாக இரண்டு கைகளும் புதிதாக பொருத்தப்பட்டது. அவருக்கு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.மேலும், இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ரமாதேவி தலைமையிலான ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மருத்துவ குழுவினருக்கு முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார். 





சூரிய சக்தி கொள்கை புத்தகம்: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்ட `தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2019' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி வெளியிட, மின்சார துறை அமைச்சர் தங்கமணி பெற்றுக் கொண்டார். தமிழகத்தில் 9000 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்கள் நிறுவுவதற்கான இலக்கினை அடைய இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு நிகர பயனீட்டளவு வசதியும், சூரிய மின்திட்டங்கள் சார்ந்த வேலைவாய்ப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. சூரிய எரிசக்தி உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.ரூ.2.32 கோடியில் 38 ஜீப்புகள்: 





நிதி துறையின் கீழ் செயல்படும் கருவூல கணக்கு துறையில் செயல்படுத்தப்படும் ஐஎப்எச்ஆர்எம்எஸ், என்எச்ஐஎஸ், பிஎப்எம்எஸ்,ஜிஇஎம் போன்ற திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்திட, 32 மாவட்ட கருவூல அலுவலர்கள் மற்றும் 6 சம்பள கணக்கு அலுவலர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக ரூ.2 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் செலவிலான 38 ஜீப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அடையாளமாக, 7 ஜீப்புகளுக்கான சாவிகளை ஓட்டுநர்களுக்கு நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment