தமிழ் மொழி படிப்புகளும் வாய்ப்புகளும்... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழ் மொழி படிப்புகளும் வாய்ப்புகளும்...

வேலைவாய்ப்பைப் பெற ஆங்கிலம், இந்தி போன்ற பிறமொழி அறிவு அவசியம் என்ற பிம்பம் அண்மைக்காலமாக பெரிதாகப் பேசப்படுகிறது. நடப்பு நிகழ்வுகளும் அது உண்மையோ என்று இளைஞர்களை யோசிக்க வைக்கிறது. 






இதனால், தமிழ்த் துறையைத் தேர்வு செய்து படிப்பவர்கள் குறைந்து வருகின்றனர். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தமிழ்ப் படிப்பு ஏற்கெனவே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மக்களின் பிறமொழி நாட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. தமிழ் மொழி படிப்புகள் படிப்பவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து செயல்பட்டால் பயனடையலாம். 




உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதையும் செம்மொழி என்ற பெருமை உள்ளதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால், கல்லூரிகளில் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பதை இப்போதுவரை பெருமைக்குரியதாக இளைஞர்கள் எடுத்துக்கொள்ளாதது வேதனை அளிக்கிறது. நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை அறியவும் அதனை உலகுக்கு எடுத்துச் செல்லவும் தமிழ் இலக்கியப் படிப்புகள் நமக்கு உதவுகின்றன. தமிழில் இளங்கலை (பி.ஏ.) பட்டப்படிப்பு முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை படிக்க முடியும். அத்துடன் ஆசிரியர் கல்வியியல் பயிற்சியும், பட்டப்படிப்பும், படிப்போருக்கு ஆசிரியர், பேராசிரியர் பணிவாய்ப்புகளும் காத்திருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் துறை மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் இந்த மொழி சார்ந்த பணியிடங்களைப் பெற முடியும். 




பி.ஏ. பி.எட்., எம்.ஏ. எம்.எட். படிப்பவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர் பணிகள் எளிதாகக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிப்பவர்கள் குறைவாக உள்ளதால், ஏராளமான கல்வி நிலையங்களில் தமிழ் ஆசிரியர் தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதே போன்று கலை அறிவியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தமிழில் எம்.ஃபில்., பிஎச்.டி. படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்கள், தமிழ்த் துறையில் பட்டம் பெற்றவர்கள் பல்வேறு துறைகளிலும் கோலோச்சுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 




குறிப்பாக, அரசின் பல்வேறு துறைகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. அதே போன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளில் தமிழில் பயின்றோர் எளிதில் தேர்வு எழுத முடியும் என்பதுடன், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்ப் படித்தவர்களுக்கு தமிழ் ஆசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு அதில் மாற்றம் செய்யப்பட்டு, பல நிலைகளில் சிறப்பான பணிகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 







ஊடகத் துறையில் மொழி படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எழுத்து, பேச்சு ஆகிய இரு நிலைகளிலும் சிறந்த ஆற்றல் கொண்டிருந்தால் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். குறிப்பாக, பத்திரிகைகள், பதிப்பகங்கள், அச்சகங்கள், பருவ இதழ் நிறுவனங்கள் என இதழியல் துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. 





அதே போன்று தொலைக்காட்சி, வானொலி பண்பலை போன்றவற்றில் இந்தியாவில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் தமிழ் படித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. இன்று ஊர்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய நெருக்கடி தனியார் தொலைக்காட்சிகளுக்கு உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பு, செய்தி வாசிப்பு ஆகிய பணிகளில் தமிழ்ப் பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். புகழ் பெற்ற பிபிசி சீனா, ஜப்பான், இலங்கை, ஆஸ்திரேலியா, அமெரிக்க வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ் கற்றவர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய பணிகள் கிடைக்கின்றன. இது தவிர தற்கால விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன. 





மேலும், கணினி அச்சு தொடர்பான நிலைகளில் பழந்தமிழ் இலக்கியங்களை அச்சிடுதல் மின்னுருவேற்றல் போன்ற பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றன. மரபார்ந்த செம்மையான தமிழ் அறிவு பெற்றவர்கள், இந்தப் பணியிடங்களில் கௌரவமான ஊதியத்துடன் பணியாற்ற முடியும். தமிழோடு பிறமொழி அறிவு இருப்பின், மொழிபெயர்ப்புத் துறைகளில் ஏராளமான வாய்ப்புகளைப் பெறலாம். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால், தமிழ் என்றைக்கும் பணி வாய்ப்பளிக்கும் பாடமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 






 கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான "சிலெட்', "நெட்' தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை நிறைவு செய்யும் வரை ஊக்கத் தொகையாக மாதம் ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை பல்கலைக்கழக மானியக்குழு அளிக்கிறது. அதே போன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ்ப் பட்டபடிப்பில் சேருவோருக்கு எனத் தனியாக கல்வி ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இப்படி உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை தமிழர்கள் நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளிலும் பணி நிமித்தமாக குடிபெயர்ந்து வருகின்றனர். அங்கு தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மறந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில் அவர்கள் சேர்க்கின்றனர். அங்கும் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 






இவ்வாறு உலகம் முழுவதும் தமிழ்ப் படிப்புக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் இதை உணர்ந்து தங்கள் தகுதிகளை தமிழ்த் துறையில் வளர்த்துக்கொண்டால் சிறப்பான எதிர்காலம் நிச்சயமாக உண்டு. 





🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment