தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க தாமதித்தால் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்: மாநில தகவல் ஆணையர்கள் தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க தாமதித்தால் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்: மாநில தகவல் ஆணையர்கள் தகவல்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதாரர் கோரும் கேள்விக்கு பதில் அளிக்க தாமதிக்கும், தவறான தகவல்கள் அளிக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதாக மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரதாப்குமார், எஸ்.டி.தமிழ்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் தெரிவித்தனர். 






தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து அரசுத் துறைகளிலும், சார்நிலை அலுவலகங்களிலும் தகவல்கள் அளிக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு இந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரதாப்குமார், எஸ்.டி.தமிழ்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்து பேசியது: இந்திய ஜனநாயக நாட்டில் அனைவரும் பல்வேறு அரசு துறைகளில் தேவைப்படும் பதில்களைப் பெற்று பிரச்னைகளுக்கு தீர்வு காண தகவல் அறியும் உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. 




தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனுதாரர் கோரும் கேள்விகளுக்கு சம்பந்தபட்ட அரசு பொது தகவல் அலுவலர்கள் காலம் தாழ்த்தாமலும், ஒளிவு மறைவின்றியும் பதில் வழங்க வேண்டும். மனுதாரருக்கு பதில்களை வழங்குவதில் அலைக்களிப்பு செய்யக் கூடாது. மேலும், மனுதாரருக்கு பொது தகவல் அலுவலர்களின் பதில்கள் அதிக பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும், அத்தனை பக்கங்களையும் கட்டாயமாக வழங்க வேண்டும். பொது தகவல் அலுவலர்கள் தன்னிடம் தகவல் இல்லை என்றால் தகவல் இருக்கும் அதிகார அமைப்புக்கு மனு பெற்ற 5 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 




தகவல்களை தவறானதாகவும், காலம் தாழ்த்துவதும் இருக்கும்பட்சத்தில் பொது தகவல் அலுவலருக்கு அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் விதி உள்ளது. எனவே, பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான நேரத்திலும், உண்மையான தகவல்களையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றனர். வேலூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் மீது மனுதாரர், பதில் அளிக்கும் பொது தகவல் அலுவலர்களிடையே நேரடி விசாரணை நடத்தப்பட்டது. 






நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், அனைத்து துறை பொது தகவல் அலுவலர்கள் பங்கேற்றனர். 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment