பள்ளிக் கல்வித் துறை சார்பில் இம்மாதம் மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்த கல்வித் தொலைக்காட்சி தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இம்மாதம் மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்த கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்

மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 மணி நேர கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 




இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களிடையே போட்டி மனப்பான்மையைக் குறைத்து ஆற்றலை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 10-ம் வகுப்பு, பிளஸ் 2-வில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புக் கையேடுகள் மற்றும் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறையால் கல்வித் தொலைக்காட்சி இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8-வது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 



 அதிகாரிகள் ஒருங்கிணைப்பு பணி இந்த அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கு, ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்பச் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோர் மேற்பார்வையில் கல்வித் துறை இணை இயக்குநர்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொலைக்காட்சியில் 24 மணி நேரமும், கல்வி தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. 





அரசு செட்டாப் பாக்ஸில் 200-வது சேனலில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாக உள்ளது. என்னென்ன நிகழ்ச்சிகள் தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்க உரையும், அனிமேஷன் விளக்கமும் இடம் பெறும். காலை 5.30 மணிக்கு 'நாள் குறிப்பு' என்ற தலைப்பில் அன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்கப்படும். 'இந்த நாள் இனிய நாள்' என்ற தலைப்பில் உலக நிகழ்வுகள், செய்தித் தொகுப்புகள், அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள் கொண்டு சேர்க்கப்படும். காலை 5.30 மணி முதல் 6 மணி வரை 'நலமே வளம்' என்ற தலைப்பில் உடற்பயிற்சி, யோக செயல் விளக்கம், ஆரோக்கியம் குறித்த விளக்கவுரை, உணவு முறை, எளிய மருத்துவம் குறித்து விளக்கப்படும். காலை 6 முதல் 6.30 மணி வரை 'குருவே துணை' என்ற நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த விளக்கப் படம், அவர்களது சாதனைப் பேட்டிகள், கல்வியாளர்களின் கருத்துகளும் இடம் பெறும். காலை 6.30 முதல் 7 மணி வரை 'சுட்டி கெட்டி' என்ற நிகழ்ச்சியில் சாதனை மாணவர்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் இடம்பெறும். 





 தொடர்ந்து 7 மணி முதல் 7.30 மணி வரை 'வல்லது அரசு' என்ற நிகழ்ச்சி மூலம் தமிழக அரசின் கல்வித் துறையின் செயல்பாடுகள், அறிவிப்புகள், பேட்டிகள், கல்வித் துறை மானியங்கள், நலத் திட்டங்கள், அரசின் சாதனை விளக்கங்கள் இடம்பெறும். 7.30 மணி முதல் 8 மணி வரை 'ஒழுக்கம் விழுப்பம் தரும்' என்ற நிகழ்ச்சியில் நல்லொழுக்கக் கதைகள், மாணவா்களின் குறு நாடகங்கள், வாழ்வியில் உரைகள் இடம் பெறும். இவ்வாறு 24 மணி நேரமும் மாணவர்களுக்குப் பயனுள்ள பாடக் குறிப்புகள் ஒளிபரப்பப்பட உள்ளன. 





மேலும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்தக் கல்வித் தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment