பிரமாண்ட அரங்கத்தில் தன்னம்பிக்கையுடன் அமர்ந்திருந்தான் ராம். ஆனால் அவன் மனம் கடந்த காலத்தில் நிலைகொண்டிருந்தது, குறிப்பாக அவன் வாழ்வை மாற்றிய அந்த நாளில்.
அது ஒரு காபி ஷாப். ஆர்டர் செய்திருந்த கேப்பசினோ வந்து ஆவி பறக்க அவன் நாசியை வருடியது. ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலையில் ராம் இல்லை. நாற்காலியில் ஒடுங்கியிருந்தான்.
நண்பன் அவன் பையிலிருந்து சில ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து ராமின் பையில் வைத்தான்.
``எதற்கு" என்பதாக ராம் பார்த்தான்.
``இது உன்னுடைய இந்த மாதச் சம்பளம். நாளையிலிருந்து நீ வேலைக்கு வரவேண்டாம்" என்றான் நண்பன். சொற்கள் காதில் விழுந்து மூளைக்குச் சென்று பொருள் உணர்வதற்குள் ராமிற்கு மயக்கம் வருவது போல் ஆயிற்று.
``ராம், சொல்ல வருத்தமாகத் தானிருக்கிறது. ஆனாலும் நீ மாறவேண்டும். இன்னும் எத்தனை நாள்களுக்கு உன் தோல்விகளையே நினைத்துக்கொண்டிருப்பாய். ஏன் தேவையில்லாமல் உன் கைகள் நடுங்குகின்றன? வங்கி ஏ.டி.எம் -ல் இருந்து பணம் எடுக்க ஒன்றும் பெரிய சாமர்த்தியம் தேவையில்லை.
ஆனால் நீ மறுக்கிறாய். ஏன்? தேவையில்லாத கற்பனைகளை உன் பயம் உருவாக்குகிறது. அது குறித்து நீ நிச்சயம் சிந்திக்கத்தான் வேண்டும்"
நண்பன் காப்பியை அருந்தினான்.
நண்பனின் அலுவலகத்தில் வேலைபார்ப்பதைப் போன்ற சௌகரியமானதும் அதே நேரம் அசௌகரியமானதும் வேறில்லை. ஏற்கெனவே அவன் வேலைபார்த்த அலுவலகத்தை மூடிவிட்டதும் என்ன செய்வதென்று மனம் திகைத்தது. கிடைக்கும் புதிய வேலைகளில் சம்பளம் மிகக் குறைவாக இருந்தது. எல்லோரும் இளைஞர்களாக இருக்கும் அலுவலகத்தில் ஒரு நடுத்தர வயதுக்காரன் உள்நுழைந்து சகஜமாவதென்பது அத்தனை எளிதில்லை. ராம் முயன்றான். ஆனால் முடியவில்லை.
6 மாதங்களில் 4 வேலைகள் மாறியாகிவிட்டது. பிள்ளைகள் இன்னும் பள்ளியைத் தாண்டவில்லை. சேமிப்புகள் கரைந்து கடன் வாங்கத் தொடங்கியாயிற்று. அப்போதுதான் இந்த நண்பனைப் பார்த்தான். அவன் அலுவலகத்தில் வேலை இருப்பதாகச் சொன்னான். சேர்ந்தாயிற்று. ஆனால் அங்கும் பிரச்னை.
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க மறுத்தது அவ்வளவு பெரிய குற்றமா? ஏற்கெனவே தொடர்ந்து மூன்று முறை தவறான `பின்' அழுத்தித் தன் டெபிட் கார்டை இழந்தவன்,
வேறு என்ன சொல்வான்? நண்பன் சொன்னபோது மறுத்தது தவறாகிவிட்டது.
நண்பன் சொல்லிக்கொண்டு ராமுக்காகக் காத்திராமல் எழுந்துபோனான். ராம் எழுந்து வெளியே வந்தான். வீடு நடந்துபோகும் தூரமில்லை என்றபோதும் பஸ் பிடிக்க மனம் இல்லாமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ராம்.
அவன் வீடு இருக்கும் பகுதிக்குச் செல்வதற்குள் இருட்டிவிட்டது. தன் எதிர்காலம் போல அந்தப் பகுதியும் இருண்டுகிடக்கிறது என்று நினைத்துக்கொண்டே நடந்தான். கொஞ்சம் தொலைவில் மிரட்டும் இரு மின்மினிகளைப் போன்ற வெளிச்சம். கூடவே `கர்...' என்று சிறு உறுமல். மனம் ஒரு கணம் அசையாது நின்றது. இப்போது மேலும் சில நெருப்பு விழிகள் தோன்றிக் குரல் கொடுத்தன.
தெருநாய்கள், இந்தப் பகுதியில் ஒரு தொல்லை. இருளுக்குக் கண்கள் பழகிவிட்டதும் நாய்கள் சுற்றிக்கொண்டு நிற்பது தெரிந்தது. ராம் ஒருகணம் ஓடிவிடலாமா என்று நினைத்தான்.
இந்த நாய்களின் குணமே ஓடுபவர்களைத் துரத்துவதுதானே. அப்படியே நின்றான். `ஏய், போ' என்று குரல் கொடுத்தான். அதற்குள் ஒரு நாய் கால்களை அவன்மேல் போட்டது. அவனுக்குள் அச்சம் பீறிட்டது. ஆனாலும் அசையாது நின்று `சீ...போ' என்று விரட்டினான். அவை கொஞ்சம் பின் வாங்கின.
சிறிது தைரியம் கொண்டு மீண்டும் அவற்றைத் துரத்தும் பாவனை செய்தான். அவை விலகின. இப்போது நடையைத் தீவிரப்படுத்தி, வீட்டு வாசலுக்கு வந்தான். கதவைத் தட்டாமல் கொஞ்சநேரம் திண்ணையில் அமர்ந்தான்.
இந்த நாய்களைப் போலத்தானே பிரச்னைகளும். எல்லாம் ஒரே சமயத்தில் சூழ்ந்து கொண்டு பயமுறுத்துகின்றன. ஆனால் துணிந்து குரல் கொடுத்ததும் நாய்கள் விலகியதுபோல பிரச்னைகளும் விலகுமா? இந்தத் துணிவு எல்லா நாளும் பலிக்குமா? ராம் யோசித்தான்.
மறுநாளும் அவன் வேலைதேடி ஊர் சுற்றிவிட்டுத் தாமதமாக நடந்தே வீடு வந்தான். வழக்கம் போல நாய்கள் குரல்கொடுத்தன.
ஆனால் எழுந்து வரவில்லை. அவன் `ஏய், பேசாம இரு' என்று குரல் கொடுத்தான். அவை கொஞ்சம் அடங்கின.
அடுத்த நாளும் இரவு நடந்துவந்தபோது பாதையில் நிலவு ஒளி கூடியிருந்தது. வெளிச்சத்தில் நாய்கள் படுத்திருப்பது நன்கு தெரிந்தது. சில, படுத்தபடியே வாலாட்டின. ஒரு சில, வாலாட்டியபடி வீடு வரை அவன்கூட வந்தன. ராமிற்கு ஒன்று புரிந்தது. ஒரு சிறு துணிவு பயத்திலிருந்து விடுதலை தருகிறது, கூடவே பிரச்னைகளும் தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டு விடுகின்றன.
மறுநாள் செய்தித்தாளில் தனியார் வங்கிப் பணி ஒன்றுக்கான அறிவிப்பு வந்திருந்தது. ராம்
அதைப் பார்த்தான்.
ஏன் அதற்கு விண்ணப்பிக்கக் கூடாது? விண்ணப்பித்தான். ஆறுமாதம் தன் நேரம் முழுமையையும் அதற்கெனத் தயாராவதிலேயே செலவிட்டான். தேர்வு எழுதி வெளியே வந்த கணத்தில் அவன் கை நடுக்கம் நின்றுவிட்டதை உணர்ந்தான். அதன்பின் நேர்முகத் தேர்வு நடந்தது. அதை அவன் எதிர்கொண்ட விதமே அவனை அந்த வேலைக்குத் தகுதியுள்ளவனாக்கி விட்டது.
ஆறுமாதம் புனேயில் பயிற்சி. போய் வந்தான். வேலை விவரம் அவன் கைக்கு வந்தது. அதை வாசித்தபோது அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. `ஏ.டி.எம். ரெக்கன்சிலேசன் மேனேஜர்' என்றிருந்தது. அதன்பின் தொடர்ந்து ஏழாண்டுகள் கடின உழைப்பு. அதன் பலன்தான் இன்றைய நிகழ்ச்சி.
``இப்போது இந்த ஆண்டுக்கான பெஸ்ட் பர்ஃபார்மர் விருதைப் பெற ராமை மேடைக்கு அழைக்கிறோம்"
ராம் நினைவுகளைக் கலைத்துக்கொண்டு எழுந்து மேடையேறி விருதினை வாங்கினான். மைக் அவன் வசம் வந்தது.
``இந்த விருதுக்கு நன்றி. வாழ்க்கைல பயத்தை உதறி நம்பிக்கையோடு எழுந்து நின்னா எல்லாரும் பெஸ்ட் பர்ஃபார்மர் ஆகிடலாம். அதுக்கு நான்தான் உதாரணம். தோல்விக்கும் சாதனைக்கும் இடையே சிறு இடைவெளி; அதைத் துணிவு கொண்டு நிரப்பலாம். அந்த முதல்கண துணிவில்தான் இமாலய வெற்றிகள் கூட உதயமாகிறது." கைதட்டல்களில் அரங்கமே அதிர்ந்தது.
No comments:
Post a Comment
Please Comment