தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் அறிவியல் உள்பட சில பகுதிகளில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் துணை ஆட்சியர் 27, காவல்துறை துணை கண்காணிப்பாளர் 90, வணிகவரித் துறை உதவி ஆணையர் 18, கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் 13, மாவட்டப் பதிவாளர் 7, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 8, மாவட்ட தீ மற்றும் பாதுகாப்புத் துறைத்துறை அலுவலர் 3 என மொத்தம் 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தப் பணியிடங்களுக்கு 2,30,588 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் 1,150 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வினை 1,21,887 ஆண்களும், 1,07,540 பெண்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,29,438 பேர் எழுதினர். இதற்காக 773 தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள், 773 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 773 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வுப் பணியில் 48,652 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய குரூப் 1 தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
யுபிஎஸ்சி தரத்துக்கு... குரூப் 1 வினாத்தாள் குறித்து தேர்வர்கள் சுபாஷ் சந்திர போஸ், கே.மணவாளன், சி.ஆர்.ஆனந்தி உள்ளிட்டோர் கூறியது:
தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் இடம் பெற்றிருந்தன.
ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள். கணிதம் குறித்து இடம் பெற்றிருந்த 50 வினாக்களில் 80 சதவீத வினாக்கள் எளிதாக இருந்தன.
நடப்பு நிகழ்வுகள் குறித்து இடம்பெற்றிருந்த அஸாமில் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட போகி பீல் பாலம், தங்க நாற்கரச் சாலை, கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் போன்ற கேள்விகள் ஓரளவுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் இருந்தன.
அதே நேரத்தில் அறிவியல், பொது அறிவுப் பகுதிகளில் மிகவும் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற குரூப்- 1 தேர்வுகளில் நேரடியான வினாக்களே இடம் பெற்றிருந்தன.
ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக பெரும்பாலான கேள்விகள் நன்கு சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய வகையில் இருந்தன. குரூப் 1 தேர்வு என்றாலும் வினாத்தாள் யுபிஎஸ்சி தேர்வின் தரத்துக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது என்றனர்.
No comments:
Post a Comment
Please Comment