ஆசிரியர்கள் மீதான வழக்கு வாபஸ்? முதல்வரே முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர்கள் மீதான வழக்கு வாபஸ்? முதல்வரே முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் போட்ட வழக்கு குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 




ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் பள்ளிகள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தடையின்மை சான்று பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 




இதில் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, மாணவர் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. தனியார் பள்ளிகளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை. இது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கும் பொருந்தும். இதனால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடையின்மை சான்று பெற வேண்டியது அவசியம். அந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. 




அதனால் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர சான்று வழங்க முடியாது. இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கிடைத்தால் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் பெற்றோர்களே குழந்தைகளை சேர்ப்பார்கள். ஆங்கில வழி கல்வி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சம் குழந்தைகளை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 




போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது காவல்துறையினர் போட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் மீது உள்ள ஒழுங்கு நடவடிக்கை குறித்தும், போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு குறித்தும் ஆய்வு செய்து முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment