நேற்று நடந்த அறிவியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அறிவியல் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகளில் பல கேள்விகள் இதற்கு முன்பு தேர்வில் கேட்கப்படாத கேள்விகளாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அறிவியல் ஆசிரியர்கள் கூறியது:
தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்விமுறை கொண்டு வரப்பட்டது. இந்தக் கல்வித் திட்டத்தின் நோக்கமே, அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை தயக்கமின்றி சந்திக்க வேண்டும் என்பதே ஆகும்.
ஆனால், இந்த ஆண்டு அறிவியல் தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. 2 மதிப்பெண் பகுதியில் 19 கேள்விகள் புத்தகத்தில் உள்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஒரு மதிப்பெண் பகுதியில் 8 கேள்விகள் கிரியேட்டிவ் டைப் கேள்வியாக வந்துள்ளது.
புத்தகத்தை முழுமையாக படித்த மாணவர்கள் மட்டுமே தேர்வில் சென்டம் பெற முடியும். 5 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றுள்ள கேள்விகளும் மாணவர்கள் எதிர்பார்க்காத கேள்விகளாகும். அரசு பள்ளியில் மெல்ல கற்கும் மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தகத்தின் பின் பகுதியில் இடம் பெற்றுள்ள கேள்விகளில் இருந்து 20 மதிப்பெண்ணுக்கு மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்படவில்லை.
கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த கணிதத் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் கடினமாக இருந்த நிலையில் தற்போது அறிவியல் தேர்வும் அதேபோல் அமைந்துள்ளதால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையும். இவ்வாறு அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment