கணினி பயிற்றுனர் தேர்வு பாடத்திட்டத்தை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கணினி பயிற்றுனர் தேர்வு பாடத்திட்டத்தை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை

கணினி பயிற்றுனர் டிஆர்பி தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: 






கடந்த "01-03-2019" அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB Board) இணையதளத்தில் TRB விளம்பர எண் '19 CI'-ல் 814 கணினி பயிற்றுநர் (Computer Instructor Grade-I) பணியிடத்துக்கான அறிவிப்பு (Official Notification) வெளியானது. பெரும்பாலும், ஆசிரியர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டால் அந்த அறிவிப்பின் இறுதியிலேயே அந்த தேர்விற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB Board) வெளியிடுவது வழக்கம். ஆனால், கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் அப்படி எந்தவொரு பாடத்திட்டமும் வெளியிடப்படவில்லை என்பது பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கணினி பயிற்றுனர் Grade-I பணியிடங்களுக்கு வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பிற்கான (19 CI) பாடத்திட்டத்தை (Syllabus) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலேயே வெளியிட வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 






 இந்த அறிவிப்பில் வரிசை எண்.7-ல் (பக்க எண்.5) "Scheme of Examination" பிரிவில் இந்த தேர்வுக்கான மதிப்பெண்களின் வகைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கணினி பயிற்றுனர் தேர்வுக்கான "பாடத்திட்டம் (Syllabus)" இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை. Also Read | ராகுலை கிண்டல் செய்ய போய் விமர்சனத்தில் சிக்கிய பிரதமர்.. மோடியின் பேச்சால் சர்ச்சை மேலும், பக்க எண்.5-ல் கடந்த மாதம் "27-02-2019" அன்று வெளிவந்த அரசாணை எண்.10-ல் "(G.O.(2D) No.10)" School Education (SE7(1)) -- இந்த கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 




ஆனால், பள்ளி கல்வித்துறையின் இந்த அரசாணையை "(G.O.(2D) No.10)" இணையத்தில் பெற முடியவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த பாடத்திட்டம் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் இல்லை. இவ்வாறு குழப்பமான‌ ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது, இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பல ஆசிரியர் தேர்வு "பயிற்சி மையங்கள் (Coaching Centers)" கணினி ஆசிரியர்களை மூளைச்சலவை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். 







இதனால், எப்பாடு பட்டாவது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என, ஏமார்ந்து போவது என்னவோ ஏற்கனவே வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்கள் தான். பயிற்சி வகுப்புகள் நடத்துவது தவறில்லை; ஆனால், எந்தவொரு முறையான பாடத்திட்டமும் இல்லாமல் அதிகப்படியான சேர்க்கைக்காகவும், பணத்திற்காகவும் பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஏற்புடையதல்ல. 





சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று "போலியான பாடத்திட்டங்களை (Fake Syllabus)" உருவாக்கி அவற்றை கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என சமூக ஊடகங்களிலும், WhatsApp குழுக்களிலும்‌ பகிர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் இந்த குற்றச்சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கணினி ஆசிரியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 





 அதனால், இந்தமாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க உடனடியாக கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிட வேண்டும் என அனைத்து கணினி ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். கணினி ஆசிரியர்களின் நலன் கருதி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை (Syllabus) வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை?? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment