பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, ஆறு மாத தொழிற்பயிற்சி அளிக்கும், மத்திய அரசின் திட்டம், ஜூலையில் துவக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு மட்டும், ஐந்து லட்சம் மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பல்கலை மற்றும் கல்லுாரிகளில், பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நோக்கில், 'ஷ்ரேயஸ்' எனப்படும், திட்டத்தை துவக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டது.
இது குறித்து, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
9.25 லட்சம்:
இதையடுத்து, மூன்று அமைச்சகங்களும் இணைந்து, இந்த திட்டத்தை, பிப்ரவரி இறுதியில் அறிவித்தன. இதற்காக, பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், 'தங்கள் பெயரை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில், மார்ச், 25க்குள் பதிவு செய்ய வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த பயிற்சி பெற, நாடு முழுவதும் உள்ள, 1,533 பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் இருந்து, 9.25 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது பற்றி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'ஷ்ரேயஸ்' திட்டத்துக்கு, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த பயிற்சி பெற, 9.25 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். படிக்கும் போதே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாணவர்களிடம், இந்த திட்டம் ஊக்கப்படுத்தும். கல்விக்கும், தொழில்துறைக்கும் ஒரு பாலமாக இந்த திட்டம் அமையும். இந்த திட்டத்தை செயல்படுத்த, நாடு முழுவதும் உள்ள, பல்வேறு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன், அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்த திட்டம், ஜூலை மாதத்திலிருந்து செயல்பட உள்ளது.
முதல் கட்டமாக, மூன்று லட்சம் மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆண்டில் மட்டும், ஐந்து லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலம், ஆறு மாதம். பயிற்சி காலத்தில், மாணவர்களுக்கு உதவித் தொகையாக, மாதம், 6,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், பயிற்சி காலத்தில் ஏற்படும் செலவுகளுக்காக, மத்திய அரசிடம் இருந்து, மாதம், 1,500 ரூபாய், திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
பதிவு செய்துள்ள மாணவர்களில், தகுதி அடிப்படையில், பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். அடுத்த ஆண்டு, இந்த திட்டத்தில்,மேலும் பல நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, 10 லட்சம் மாணவர்கள் வரை, பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியை சிறப்பாக முடிக்கும் மாணவர்களுக்கு, அதே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
Please Comment