முதுநிலை மருத்துவ கவுன்சலிங்கில் வெயிட்டேஜ் குறித்து மே 31 வரை கருத்து தெரிவிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சலிங்குக்கான வெயிட்டேஜ் முறை மீது மே 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதுநிலை மருத்துவம், முதுநிலை டிப்ளமா மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் நடைமுறை கடந்த ஆண்டு தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொலை தூரத்தில் பணியாற்றுபவர்கள் (மலைப்பகுதிகள், எளிதில் சென்று வர முடியாத ஊர்கள்), கடினமான பணி சூழலில் பணியாற்றுபவர்கள், ஊரக பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு என முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனித்தனியே வெயிட்டேஜ் முறை உருவாக்கப்பட்டது. பணிசெய்யும் இடத்தின் அடிப்படையிலான வெயிட்டேஜ் முறையில் குளறுபடி இருந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
அதில் உண்மையில் தொலைதூர கிராமங்களில் பணியாற்றுபவர்கள் அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பதற்கு பதிலாக, நகரங்களுக்கு அருகே உள்ள கிராமங்களில் பணியாற்றுபவர்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுக்கும் வகையில், தமிழக சுகாதாரத்துறை வழிமுறைகளை உருவாக்கி அதை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
தவறான பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கியதாகவும் அதன் அடிப்படையில் தவறான வெயிட்டேஜ் முறை பின்பற்றப்பட்டதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
அது தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெயிட்டேஜ் முறைதொடர்பாக முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் கருத்து தெரிவிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் நேற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் தொலைதூரத்தில் பணியாற்றுபவர்கள்/ கடும் பணிச்சூழலில் பணியாற்றுபவர்கள்/ ஊரகபகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மேற்கொண்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மறுஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு பின், 2019ம் ஆண்டு முதுநிலை மருத்துவம்/ முதுநிலை டிப்ளமா மாணவர் சேர்க்கைக்கு எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து, எந்ததெந்த பகுதிகளுக்கு எவ்வளவு வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் முதுநிலை/ முதுநிலை மருத்துவ டிப்ளமா மாணவர்கள் கருத்துக்களை அனுப்பலாம்.
www.tnmedicalselection.org , www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கருத்துக்களை அனுப்பலாம். எந்த பகுதிக்கு எவ்வளவு வெயிட்டேஜ் அளிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் மேற்கண்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருத்து, பரிந்துரைகளை அனுப்புபவர்கள் ''கூடுதல் மருத்துவக்கல்வி இயக்குனர்/ ெசயலாளர், தேர்வுக்குழு, எண். 162, ஈ.வே.ரா. பெரியார் சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு மே 31ம் தேதிக்குள் அனுப்பலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ கவுன்சலிங்கில் வெயிட்டேஜ் குறித்து மே 31 வரை கருத்து தெரிவிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவிப்பு
No comments:
Post a Comment
Please Comment