பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையை சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய, மாநில அரசுகள் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படிப்பதை ஊக்குவிக்கின்றன. இதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை ஒதுக்கி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளன.
கல்லூரியின் விண்ணப்ப படிவத்திலும், கையேட்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கல்விக்கட்டணங்கள் குறித்து, தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என 2018, ஏப்ரல் 25ம் தேதி உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு விண்ணப்ப படிவத்தை பலதுறை சேர்க்கைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப்படிவம் ₹48, பதிவுக்கட்டணம் ₹2 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பக்கட்டணம் ₹58, பதிவுக்கட்டணம் ₹2 என மொத்தம் ₹60 மட்டுமே வசூலிக்க வேண்டும் என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பப்படிவம் உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு உதவிபெறாத கல்லூரிகள், சுயநிதிப்பிரிவு கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும். ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் விண்ணப்ப படிவத்திற்கு கட்டணமாக குறைந்தது ₹300 வசூலிக்கப்படுவதோடு, ஒவ்வொரு துறை பட்டப்படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கின்றனர். மேலும், பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கை கட்டண விவரங்களை விண்ணப்பத்துடன் கூடிய கையேட்டில் தெரிவிப்பதில்லை.
பெரும்பாலான கல்லூரிகள் தங்களது இணையதளத்தில் ₹15 ஆயிரத்தை முதல் பருவத்துக்கு கல்விக்கட்டணமாக வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதுபோல கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு விதிமீறல்கள் நடக்கின்றன.
தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் விதிகளுக்கு உட்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல கோடி ரூபாயை பல்கலைக்கழக மானியக்குழு ஒதுக்கி வரும் சூழலில், விண்ணப்பம் மற்றும் கல்விக்கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்லூரியும் தங்களுக்கென இணையதள முகவரியை உருவாக்கி, அதில் மாணவர் சேர்க்கை, கல்விக்கட்டண விவரங்களை முழுமையாக தெரிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதிகள், ''பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி, பல்கலைக்கழகங்களும், தமிழக அரசு விதித்துள்ள விதிமுறையின்படி கல்லூரிகளிலும் விண்ணப்பக்கட்டணம், கல்விக்கட்டணம் ஆகியவற்றை வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது' என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
No comments:
Post a Comment
Please Comment