அரியர் மாணவர்களுக்கு கடைசி இரண்டு வாய்ப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் படிப்புகளில் 18 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு, அரியர் தாள்களுக்கான தேர்வை எழுதிக் கொள்ள கடைசி வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, பல ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் அரியர் தாள்களை எழுதிக்கொள்ள கடைசி இரண்டு வாய்ப்புகளை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த மாணவர்கள், 2019 நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்விலும், 2020 ஏப்ரல்-மே பருவத் தேர்விலும் இந்த அரியர் தாள்களை எழுதிக்கொள்ள முடியும். இதுவே இவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும்.
அண்ணா பல்கலைக்கழக நான்கு துறைகளில், கடந்த 2000-ஆம் கல்வியாண்டு முதல் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுபோல, 500-க்கும் அதிகமான இணைப்புக் கல்லூரிகளில் 2001-02-ஆம் கல்வியாண்டில் சேர்ந்து மூன்றாம் பருவத்தில் இருந்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களும், 2002-03-ஆம் கல்வியாண்டில் சேர்ந்து முதல் பருவத்தில் இருந்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் இந்த சிறப்பு கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இவர்களுடன், தன்னாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்களும், பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்ட மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுதொடர்பான முழுமையான விவரங்கள் வருகிற ஜூன் இரண்டாம் வாரத்தில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு கடைசி இரண்டு வாய்ப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
No comments:
Post a Comment
Please Comment