கர்ப்பிணிகளுக்கு ரூ.5,300 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமி தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கர்ப்பிணிகளுக்கு ரூ.5,300 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமி தகவல்

கர்ப்பிணிகளுக்கு ரூ.5,300 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமி தகவல்கர்ப்பிணிகளுக்கான தமிழக அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.5,300 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 56 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். 


மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 15 அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

அதிலும் குறிப்பாக, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நமது மாநிலம்தான் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமன்றி பேறு கால மரணங்களும், பச்சிளம் குழந்தைகள் மரணமும் தமிழகத்தில் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கின்றன. நமது மருத்துவர்கள் திறம்பட ஆற்றி வரும் மருத்துவ சேவைகளே அதற்கு முக்கிய காரணம். மாநிலத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் நலப் பெட்டகம், மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் என தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்கும் பல திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


பேறு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் தொகை அதன் பின்னர், ரூ.12 ஆயிரமாகவும், அதைத் தொடர்ந்து தற்போது ரூ.18 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 56 லட்சத்து 28 ஆயிரம் கர்ப்பிணிகள் பலனடைந்துள்ளனர். அவர்களுக்கு மொத்தமாக ரூ.5,300 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் மேம்பட்ட மாநிலமாக விளங்கும் தமிழகத்தை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றார் அவர். 


 இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சி. விஜயபாஸ்கர், டி.ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment