நிகழாண்டில் 15.53 லட்சம் மடிக்கணினிகள் விநியோகம்: முறைகேடுகளைத் தடுக்க தமிழக அரசு தீவிரம்
நிகழாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு 15.53 லட்சம் மடிக்கணினிகளை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மடிக்கணினிகள் வழங்கப்படும்போது முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையான முறையில் அளிக்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லாத மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. கடந்த 2011-12-ஆம் நிதியாண்டு முதல் 2016-17-ஆம் நிதியாண்டு வரையில் ரூ.5,520.49 கோடி மதிப்பில் 37.29 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிலையில், 2017-18-ஆம் நிதியாண்டிலும் ரூ.758 கோடியில் 5.43 லட்சம் மடிக்கணினிகளும், 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.758 கோடியில் 5.50 லட்சம் மடிக்கணினிகளும் கொள்முதல் செய்து விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்து. நிகழ் நிதியாண்டிலும் அதே அளவு எண்ணிக்கையில் மடிக்கணினிகள் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மொத்தமாக 15 லட்சம் அளவுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளில் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனிடையே, பள்ளிப் படிப்பை முடித்த மடிக்கணினி பெறாத மாணவர்களும் தங்களுக்கு மடிக்கணினி கோரி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மடிக்கணினிகளை வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு வழங்க 15.53 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டவாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இலவச மடிக்கணினிகளை நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுதியான மாணவர்களுக்கு வழங்குதல் அவசியமாகும்.
அதன்படி கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை இணையதளத்தில் ("எமிஸ்') இருக்கும் தரவுகளின் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். இடைநிற்றல் மற்றும் மாறுதலில் சென்ற மாணவர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது.
மடிக்கணினிகளை வழங்கும் முன் சரிபார்த்து உரிய முறையில் ஆய்வு செய்வதுடன் "பார்கோடு' விவரத்தை மாணவர் பெயருக்கு நேராக குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.
மேலும், எல்காட் நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின்னரே ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மடிக்கணினிகளை மாற்ற வேண்டும். தொடர்ந்து, மாணவர்களை மடிக்கணினி வாயிலான கற்றல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும்.
மடிக்கணினி வழங்குதலில் முறைகேட்டில் ஈடுபடும் தலைமையாசிரியர்கள், அதிகாரிகள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment