உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்க, பள்ளிகளுக்கு, மாநில தேர்தல் பிரிவு, ஊரக வளர்ச்சி துறை மூலம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த, 2016ல் நடத்தப்படாமல், வார்டு மறுவரையறை செய்வதில் தாமதம் இருப்பதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள், கீழ் நிலைகளில் நடந்து வருகிறது. இதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிப்பதற்காக, ஆசிரியர்களின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணைய யோசனைப்படி, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, அந்தந்த யூனியன் சார்பில், அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமினம் செய்ய, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விபரங்களை, அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யுங்கள். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலங்களில், அவற்றை ஒப்படைக்க வேண்டும். அதில், கடந்த தேர்தல்களில் அவர்கள் பணி புரிந்தவரா, அனுபவம் உள்ளதா, அவரது போன் எண், முகவரி உள்ளிட்ட விபரங்களையும், இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment