120 மாணவர்கள் மைசூருக்கு களப்பயணம் செல்ல ஏற்பாடு
பள்ளி கல்வித்துறை சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, 120 மாணவர்கள் கர்நாடகா மாநிலத்துக்கு, நேரடி களப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு நேரடி களப்பயணமாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இதற்காக ஒரு கல்வி மாவட்டத்தில், 30 பேர் என, 120 கல்வி மாவட்டங்களில் இருந்து, 3,600 மாணவர்களுக்கு, 72 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவனை பயணித்து அழைத்து செல்ல, 2,000 ரூபாய் அரசு வழங்குகிறது. இப்பயணங்கள் மத்திய அரசு நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி., உடன் இணைந்து, இம்மாதம் முதல், 2020 பிப்ரவரி வரை நடக்க உள்ளன. இதேபோல் சமக்ர சிக்?ஷா திட்டத்தின் கீழ், நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களையும் களப்பயணம் அழைத்து செல்ல உள்ளனர். மாவட்டத்திற்கு, 30 மாணவர்கள் வீதம், 32 மாவட்டங்களையும் சேர்த்து, 960 மாணவர்கள் களப்பயணம் மேற்கொள்கின்றனர். அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், 90 மாணவர்கள், நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, 30 பேர் என, மொத்தம், 120 மாணவர்கள், கர்நாடகா மாநிலத்திற்கு இம்மாதம் இறுதியில் களப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது, மைசூரு அரண்மனை, விமான நிலையம், ரயில் நிலையம், விலங்கியல் தோட்டம், ஓரியண்டல் நூலகம், தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment