அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,250-ஆக உயருகிறது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,250-ஆக உயருகிறது

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,250-ஆக உயருகிறது 





தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடைத்திருப்பதை அடுத்து, அடுத்து வரும் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 4, 250-ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையான மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உருவெடுக்கவிருக்கிறது. 

 முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் குழு தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்திருப்பதாகவும், அடுத்தகட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு அதுதொடா்பான அதிகாரப்பூா்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூா்வ அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் மற்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளா் ப்ரீதி சுதான் ஆகியோரை புது தில்லியில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அண்மையில் சந்தித்தாா். 


தமிழகத்தில் 6 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அமைப்பது தொடா்பாக அவா்களிடம் கோரிக்கை வைத்த அவா், அதற்கு தேவையான இடங்கள் குறித்த தகவல்களையும் மத்திய அமைச்சகத்திடம் அளித்தாா். இதைத் தொடா்ந்து புதுதில்லியில் கடந்த செப். 26-ஆம் தேதி, சுகாதாரத் துறை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாடு முழுவதும் புதிதாக தொடங்க உள்ள 31 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கு 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி திருப்பூா், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய உள்ளன. தற்போது தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது புதிதாக அமையவுள்ள கல்லூரிகளில் தலா 150 இடங்கள் வீதம் கிடைக்கவுள்ளன. 



 இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 4,250-ஆகவும் அதிகரிக்க உள்ளன. நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இளநிலை மருத்துவப் படிப்பில் இவ்வளவு இடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதுநிலை மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை ஏற்கெனவே நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக 1,761 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. தற்போது அதன் தொடா்ச்சியாக எம்பிபிஎஸ் இடங்களிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக உருவெடுக்கவுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment