உச்சத்துக்கு சென்ற நிலையில் சரிவு:
தங்கம் விலை பவுனுக்கு ரூ.624 குறைந்தது
கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை சிறிது சரிவை சந்தித்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.624 குறைந்தது.
கொரோனா தாக்கம்
காதணி விழாவில் ஆரம்பித்து திருமண பந்தம் வரை எல்லா நிகழ்வுகளிலும் தங்கம் இன்றி எந்த நிகழ்வும் நடைபெறுவது இல்லை.
சமீப காலமாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருவது ஏழை, நடுத்தர மக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள், தங்கம் மீதான முதலீடுகள் அதன் விலையை நிர்ணயம் செய்கின்றன.
சீனாவில் கொரோனா வைரஸ் பங்கு சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.
இதன் காரணமாக பங்கு சந்தை முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை தங்கம் மீது திருப்பி உள்ளனர். உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த மாதம் முதல் கணிசமாக அதிகரித்து வருவதும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
உச்சத்தில் தங்கம்
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. கடந்த ஜனவரி 3-ந் தேதி ஒரு கிராம் ரூ.3,815 ஆகவும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520-க்கும் விற்பனையாகி உச்சத்தை தொட்டது.
அதன்பின் ஏற்றமும், இறக்கமும் கண்டு வந்த தங்க விலை கடந்த 20-ந்தேதி முதல் ராக்கெட் வேகத்தில் சீறி பாய தொடங்கியது.
20-ந்தேதி ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 824-க்கு உயர்ந்தது. அதற்கு அடுத்தநாள், வரலாறு காணாத வகையில் ஒரு கிராம் ரூ.4,051 என்ற அதிகபட்ச உயர்வை எட்டி பவுனுக்கு ரூ.32 ஆயிரத்து 408-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏற்றத்தை மட்டுமே கண்டு வந்த தங்கம் கடந்த 24-ந்தேதி எட்டாக்கனியாக காட்சியளித்தது. அன்றைய தினம் முதல் முறையாக ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்தை கடந்து, ரூ.33 ஆயிரத்து 328-ஆக உயர்ந்தது.
பவுனுக்கு ரூ.624 குறைந்தது
தொடர்ந்து தங்கத்தின் விலையில் ஏற்றம் மட்டுமே இருந்ததால், இனி தங்கம் என்று எழுதி தான் பார்க்க முடியும்,
வாங்க முடியாது என்று வலைத்தளவாசிகள் தங்களுடைய சோகத்தை கூட ‘மீம்ஸ்’ ஆக்கி, வைரல் ஆக்கினர்.
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 4 நாட்களாக ஓரளவு குறைந்து வருகிறது. ஏறிய வேகத்தில் தங்கம் விலை குறைந்ததால் 32 ஆயிரம் ரூபாய்க்கு வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,064-க்கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 512-க்கும் விற்பனையானது.
தங்கத்தின் விலையில் நேற்று மாற்றம் காணப்பட்டது. பவுனுக்கு 624 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.78 குறைந்து ரூ.3,986 ஆக விற்பனை செய்யப்பட்டது.

No comments:
Post a Comment
Please Comment