சானிட்டைஸர், கிருமிநாசினி... பயன்படுத்தும்போது தவறாமல் பின்பற்றவேண்டிய விஷயங்கள்!
கொரோனா வைரஸின் தீவிரம் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் மாஸ்க், சானிடைஸர்கள், ஹேண்ட்வாஷ்கள் என்று வாங்கிக் குவிக்கின்றனர். இந்நிலையில், சானிடைஸர், ஹேண்ட்வாஷ் பற்றாக்குறையால் பலரும் கிருமிநாசினிகளை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தும் கிருமிநாசினிகளில் உள்ள வேதிப்பொருள்கள், அவற்றின் தன்மைக்கு ஏற்ப எதிர்வினை புரியும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டி உள்ளது. அது குறித்து விளக்குகிறார், சரும மருத்துவர் தினேஷ் பொன்ராஜ்.
''சானிடைஸர் மற்றும் கிருமிநாசினி இரண்டும் வேதிப்பொருள்களை மூலப்பொருள்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இவற்றின் செறிவுத்தன்மை வேறுபட்டிருப்பதால், கிருமிகளைக் கொல்லும் திறனும் வேறுபடும்.
சானிடைஸர் என்பது ஆல்கஹால் எனும் மூலப்பொருளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படுவதால், சிறந்த கிருமிக்கொல்லியாகச் செயல்படும். இவற்றை நமது கைகளில் தெளிக்கும்போது, அங்கிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொன்று உடனடியாக ஆவியாகிவிடுகிறது.
கிருமிநாசினி, தண்ணீரில் கலந்து பயன்படுத்தக்கூடியது. கிருமிநாசினியை, அதன் அதிக செறிவுத்தன்மை காரணமாகத் தண்ணீரில் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பிராண்டுகள், 100 மிலி தண்ணீரில் எத்தனை சொட்டுகள் கலந்து பயன்படுத்த வேண்டும் என்ற வரையறையையும் லேபிளிலேயே வழங்கியிருப்பார்கள்.
அதைப் பார்த்து, அதன்படி கலவையை உருவாக்கிப் பயன்படுத்தவேண்டியது அவசியம். ஆனால், மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கிருமிநாசினியை குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான அளவு தண்ணீரில் கலந்து பயன்படுத்துகிறார்கள். சிலர், தண்ணீரில் கலக்காமல் அப்படியே அதன் அடர் செறிவுத்தன்மையுடன் பயன்படுத்துகிறார்கள்.
இதனால் ஒவ்வாமை முதல் பல சருமப் பிரச்னைகள்வரை ஏற்பட வாய்ப்புண்டாகிறது. எனவே, லேபிளில் குறிப்பிட்ட அளவின் அடிப்படையில் தண்ணீர் - கிருமிநாசினியைக் கலந்துதான் பயன்படுத்த வேண்டும்.
சிலர், தொடர்ச்சியாக கிருமிநாசினிகளைப் பயன்படுத்திவருவார்கள். அது அவசியமற்றது.
நாள் முழுவதும் வீட்டில் இருப்பவராக இருந்தால் அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அலுவலகத்துக்கோ வெளியிலோ சென்று வீடு திரும்புபவர்கள், வீட்டுக்குள் நுழையும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். அதேபோல, அலுவலகத்துக்குச் செல்லும்போதும் நம்மிடமிருந்து தொற்று பரவாமலிருக்க, கைகளைக் கழுவிவிட்டுச் செல்லலாம்.
பயணங்களின்போது கைகளைக் கழுவ கிருமிநாசினியைப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கிருமிநாசினியை பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரில் கலந்து, சந்தைகளில் விற்கப்படும் ஸ்ப்ரே பாட்டில்களில் நிரப்பி எடுத்துச் செல்லலாம். தண்ணீரில் கலந்து பயன்படுத்துவதைவிட, ஸ்ப்ரே பாட்டில்களில் வைத்து தெளித்துப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும்.
வீட்டிலும் இதைப் பின்பற்றலாம். பின்னர், கைகளைக் கழுவிக்கொள்ளலாம். சானிடைஸர் போல கிருமிநாசினியைத் தொடர்ந்து பயன்படுத்துவது உகந்தது அல்ல என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.சானிடைஸர் மற்றும் கிருமிநாசினியைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, சிலருக்கு கைகளில் வறட்சி ஏற்படும்.
அவர்கள் இரவு உறங்கச் செல்லும் முன், மாய்ஸ்ச்சரைஸிங் க்ரீம்களைக் கைகளில் அப்ளைசெய்துகொள்ளலாம். இதனால் சருமத்தின் வறட்சி குறையும். என்னதான் சானிட்டைஸர் ஆவி ஆனாலும்,
சாப்பிடும் முன்னர் சானிடைஸர் பயன்படுத்திய கைகளைக் கழுவவேண்டியது மிக முக்கியம்.
சானிடைஸர்கள், கிருமிநாசினிகள் கிடைக்காத தற்போதைய சூழலில், சாதாரண சோப் கொண்டு கைகளைக் கழுவுவதே போதுமானது'' என்கிறார் சரும மருத்துவர் தினேஷ் பொன்ராஜ்.


No comments:
Post a Comment
Please Comment