பிளஸ்-2 மாணவர் உருவாக்கிய ‘வெண்டிலேட்டர்’
கொரோனாவுக்கு எதிரான இன்றைய யுத்த வேளையில், மருத்துவப் பொருட்கள், சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதை உணர்ந்து தான், ‘வெண்டிலேட்டர்’ எனப்படும் ‘செயற்கை சுவாசக் கருவி’யை உருவாக்கியிருக்கிறார், புதுச்சேரி மாணவர் ஸ்ரீராம் சங்கர். அவருடன் இதுபற்றி பேசுவோம்...
உங்களைப் பற்றி...
நான், ஸ்ரீராம் சங்கர். புதுவை மாநிலம் முருங்கபாக்கத்தில் வசிக்கிறேன். அப்பா சங்கர் ஜெயராமன், தனியார் நிறுவன மேலாளர். அம்மா மகாலட்சுமி, இல்லத்தரசி. தேங்காய்திட்டு ஏகலைவா சர்வதேசப் பள்ளியில் பயின்ற நான், பிளஸ்- 2 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.
‘வெண்டிலேட்டரை’ உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி?
நான் ஏற்கனவே, ‘அசோகா சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற சமூக மாற்றத்துக்கான அமைப்பில் இணைந்து சமூக நலச் செயல்பாடுகள், விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனவே இயல்பாகவே எனக்கு சமூகம் சார்ந்த கண்ணோட்டம் உண்டு. நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடையத் தொடங்கிய அதே வேளையில், மருத்துவ சாதனங்கள் பற்றாக்குறை என்ற செய்தியும் வெளியானது. எனவே இந்நேரத்தில் வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாக்கினால் உதவிகரமாக இருக்குமே என்று நினைத்தேன்.
‘வெண்டிலேட்டர்’ செயல்பாட்டின் அடிப்படையை எப்படி அறிந்தீர்கள்?
‘வெண்டிலேட்டரை’ உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதுமே நான் புதுடெல்லி எய்ம்ஸ் மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களை ஆன்லைன் வழியாகத் தொடர்புகொண்டு ஆலோசித்தேன். மேலும் மருத்துவ இதழ்களிலும் இதுதொடர்பான தகவல்களைச் சேகரித்தேன்.
எவ்வளவு நாட்களில் இந்தச் சாதனத்தைத் தயாரித்தீர்கள்?
இது தொடர்பான அடிப்படைத் திட்டமிடலை ஒரு வாரத்தில் முடித்தேன். நிஜத்தில் இதற்கு உருக்கொடுக்க ஒரு வார காலம் ஆனது. ஆக, சுமார் 15 நாட்களில் இதைத் தயாரித்துவிட்டேன். எனது எண்ணத்துக்கு நிஜ வடிவம் கொடுக்க, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஹஐடெக் ரிசர்ச் பவுண்டேஷனின் இயக்குனர் முரளி உதவினார்.
இந்த வெண்டிலேட்டரின் முக்கியமான பாகங்கள்... இது இயங்கும் விதம் குறித்து?
இதில் ஒரு சிறு டி.சி. கியர் மோட்டார், ஆம்பு பேக் எனப்படும் சிலிக்கான் மெட்டீரியலால் ஆன காற்றுப்பை, அந்தப் பையை விட்டு விட்டு அழுத்தும் பிஸ்டன், வெளியேற்றப்படும் காற்றின் அளவு, மோட்டார் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கண்ட்ரோலர்கள் ஆகியவை உள்ளன. 12 வோல்ட் நேரடி அல்லது பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் இந்தச் சாதனத்தை ‘ஆன்’ செய்ததுமே, மோட்டார் இயங்கி பிஸ்டனை முன்னும் பின்னுமாக தொடர்ந்து நகர்த்தும். பிஸ்டன் முன்னே செல்லும்போது, காற்றுப்பையை அழுத்தி, நோயாளிக்கு சுவாசக் காற்றை வழங்கும். பிஸ்டன் மூலம் துல்லியமாக அழுத்து வதற்கு ‘ஸ்காட்ச் அண்ட் யோக்’ என்ற மெக்கானிசத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
இந்த வெண்டிலேட்டர் குறித்து மருத்துவத் துறையினரின் கருத்து?
நான் இது இயங்கும் விதத்தை வீடியோவாகப் பதிவு செய்து, எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்து, மோட்டார் சப்தத்தைத் குறைக்க வேண்டும், மின்சாரம் இல்லாத நேரத்தில் கையால் இயக்கவும் வசதி செய்ய வேண்டும், இன்னும் கையடக்கமாக இருக்க வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளைக் கூறினர். இந்த மாற்றங்களைச் செய்வது எளிதுதான். ஆனால் இந்த ஊரடங்கு வேளையில் தேவையான பாகங்களைப் பெறுவதுதான் கடினமாக உள்ளது.
உங்கள் வெண்டிலேட்டரை இப்போதைய நிலையில் பயன்படுத்துவது சாத்தியமா?
இப்போதைக்கு, குறைந்த நேரத்துக்கு ஓர் அவசர உதவிச் சாதனமாக இதைப் பயன்படுத்த முடியும்.
இதை மேம்படுத்துவது தொடர்பாக நீங்கள் அரசுத் தரப்பை நாடினீர்களா?
நான் புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்தை நாடினேன். அவர்கள் தேவையான உதவியை வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
சமூக நோக்குடன் சிந்தித்து, இன்றைய தேவைக்கு ஏற்ற மருத்துவ சாதனத்தை உருவாக்கியிருக்கும் ஸ்ரீராம் சங்கருக்கு ஒரு ‘சபாஷ்’ சொல்லலாம்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!


No comments:
Post a Comment
Please Comment