தினம் ஒரு தகவல் பெண் குழந்தைகளுக்காக 5 லட்சம் மரம் நட்ட கிராமத்தினர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினம் ஒரு தகவல் பெண் குழந்தைகளுக்காக 5 லட்சம் மரம் நட்ட கிராமத்தினர்

தினம் ஒரு தகவல் பெண் குழந்தைகளுக்காக 5 லட்சம் மரம் நட்ட கிராமத்தினர் 

 பெண் குழந்தைகளை கொண்டாடுகிறது, ஒரு கிராமம். அதுவும் ராஜஸ்தான் மாநிலத்தின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் தான் இந்த அற்புதம் நிகழ்ந்து வருகிறது. 

 பிபிலாந்திரி என்ற கிராமத்தில் ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும் போதும் 111 மரங்களை நடுகிறார்கள். ஓர் ஆண்டில் சுமார் 60 பெண் குழந்தைகள் பிறந்தால் 6,660 மரங்கள் நடப்படுகின்றன. வேம்பு, ரோஸ்வுட், மா, நெல்லி மற்றும் மூலிகை மரங்கள் நடப்படுகின்றன. மரங்கள் கரையான்களால் அரிக்கப்படாமல் இருப்பதற்காக அருகிலேயே கற்றாழை செடிகளையும் வளர்க்கிறார்கள். 

 வளர்ந்த மரங்களில் இருந்து காய், கனிகள், மூலிகைகள் பெறப்படுகின்றன. லட்சக்கணக்கான கற்றாழைகளில் இருந்து மருந்துகள், ஜுஸ், ஜெல், ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஊரே சேர்ந்து மரம் நடும் விழாவை நடத்துகிறார்கள். 

அதற்கு பிறகு மரங்களை பராமரிப்பது பெண்களின் பொறுப்பு. இதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்கிறது. எட்டாயிரம் வீடுகள் உள்ள இந்தக் கிராமத்தில் மரம் நடும் விழா கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது. கிராம தலைவர் ஷியாம் சுந்தர் பலிவாலின் மகள் கிரண் இளம் வயதிலேயே இறந்து போனார். 

அவரது நினைவாக இனி பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும் பாதுகாக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தார், ஷியாம் சுந்தர். அதற்காக ஒரு கமிட்டியை ஆரம்பித்தார். 

 பெண் குழந்தை பிறந்தவுடன் 111 மரங்களை நடுவதோடு, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கிராமம் ரூ.21 ஆயிரம் அளிக்கிறது. இந்த ரூ.21 ஆயிரத்துடன் குழந்தையின் பெற்றோர் ரூ.10 ஆயிரம் போட வேண்டும். அதை குழந்தையின் பெயரில் வங்கியில் போட்டு விடுகிறார்கள். 

குழந்தைக்கு 20 வயதாகும் போது இந்த தொகை பயன்படும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும், உரிய வயது வருவதற்குள் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது, மரங்களை பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். 

இதில் ஒன்றை மீறினாலும் பலனை அனுபவிக்க முடியாது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ வாய்ப்பில்லாமல், கிராம மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள், எங்கள் குழந்தைகளை எவ்வளவு ரசிப்போமோ, எவ்வளவு அன்பு செலுத்துவோமோ, அதே போலத்தான் மரங்கள் மீதும் அன்பு செலுத்துகிறோம், ரசிக்கிறோம். எங்கள் பெண்கள் வளரும்போது இந்த மரங்களும் சேர்ந்து வளர்கின்றன. பெண் குழந்தைகளால் குடும்பம் தழைக்கும். மரங்களால் இந்த பூமி செழிக்கும், என்கிறார்கள் கிராமத்தினர். 

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்கிறார்கள். திட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பிபிலாந்திரியில் மது, ஆடு, மாடு மேய்த்தல், மரம் வெட்டுதல் ஆகியவை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பை கொண்டாடி, பெண்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர செய்து, தெளிவான புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள், இந்த கிராமத்தினர். இதுவரை ஐந்து லட்சம் மரங்களை நட்டு சுற்றுச்சூழலை பேணி வருகிறார்கள். 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment