தினம் ஒரு தகவல் அது என்ன ‘பேப்பர் கிரீட்’
இப்போதெல்லாம் புதிது புதிதாக எத்தனையோ கட்டுமான பொருட்கள் உள்ளன என்று சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் ‘பேப்பர் கிரீட்’...?
கான்கிரீட் தெரியும், அது என்ன பேப்பர் கிரீட் என்று யோசிக்கிறீர்களா? இதிலும் சிமெண்டு தேவைப்படுகிறது. ஆனால் முழுவதும் சிமெண்டு அல்ல...!
காகித கழிவுகள், போர்ட்லேண்ட் சிமெண்டு இரண்டையும் ஒருங்கிணைத்து இந்த பேப்பர்கிரீட்டை தயாரிக்கிறார்கள்.
இதிலேயே சிமெண்டுக்கு பதில் களிமண்ணை பயன்படுத்தியும் ‘பேப்பர் கிரீட்’ தயாரிக்கிறார்கள். சிமெண்டு பயன்படுத்தாத பேப்பர் கிரீட் பசுமைக் கட்டிடம் அமைக்க உதவுகிறது.
மிகக் குறைந்த ஆற்றலிலேயே பேப்பர் கிரீட்டை உற்பத்தி செய்ய முடியும். பேப்பர் கிரீட்டை தயாரிக்க இருபுறங்களிலும் சக்கரம் கொண்ட சிறிய டிரெயிலர் போன்ற ஒரு வாகனம் பயன்படுகிறது.
டிரெயிலர் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சட்டத்தின் மீது ஒரு வட்ட வடிவ அண்டா போன்ற பெரிய கொள்கலனில் காகித கழிவுகள், சிமெண்டு அல்லது களிமண், நீர் ஆகியவற்றை ஒன்றாக கொட்டுகிறார்கள். தேவையான அளவுக்கு நன்றாக கலக்கிய பின்னர் இதை தரையில் உள்ள பிளாக்குகளில் கொட்டுகிறார்கள்.
பிளாக்குகளின் மீது டிரெயிலரை இழுத்துச் செல்லும் போது கொள்கலனின் அடியில் உள்ள சிறுதுளை மூலம் இந்த கலவை கொட்டப்படுகிறது.
இது நன்றாக உலர்ந்ததும் பயன்படுத்தும் வகையிலான பேப்பர் கிரீட்டாக தயாராகிறது. கூழ்மத்தை அப்படியே சுவரெழுப்பும் இடத்திற்கே கொண்டு சென்று பயன்படுத்த விரும்பினாலும் அப்படியே செய்யலாம். இல்லையெனில் பிளாக்குகள் உலர்ந்த பின்னர் பயன்படுத்தலாம்.
இந்த பேப்பர் கிரீட்டுகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கான்கிரீட் பிளாக்குகளைவிட மிகவும் எடை குறைவானவை. மேலும் எவ்வளவு சிறியதாக வேண்டுமானாலும் இதை தயாரித்து கொள்ளலாம்.
எனவே கையாள்வதும் மிக எளிது. காகிதம் அடிப்படை பொருளாக இருந்தாலும் பேப்பர் கிரீட் எளிதில் தீப்பற்றாத தன்மை கொண்டது. ஏனெனில் பேப்பர்கிரீட் ஒரு ஸ்பான்ச் போலவே செயல்படுவதால் ஈரப்பதத்தை எளிதாக உறிஞ்சி கொள்ளும். ஈரத் தன்மை உள்ளதால் தீப்பற்ற வாய்ப்பில்லை. வெயில் காலத்துக்கும் மழைக் காலத்துக்கும் இது ஏற்றது, என்கிறார்கள்.
சுவரில் ஆணியை பொருத்துவதோ, திருகாணியை செலுத்துவதோ எளிது என்கிறார்கள். சுவரில் வெடிப்பு தோன்றாத வகையில் இவற்றை செலுத்திவிடலாம். பேப்பர் கிரீட் எதையும் எளிதில் கடத்தாத தன்மை கொண்டது. அதனால் வெப்ப காலத்தில் வீட்டுக்குள் அதிக வெப்பம் பரவாது, அதே போல குளிர்காலத்தில் குளிரும் உள்ளே ஊடுருவாது என்றும் சொல்கிறார்கள். ஒலியையும் இது கடத்தாது என்பதால் அதிக சத்தம் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரவும் வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment
Please Comment