கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகழுவ தேவைப்படும் தண்ணீர் எவ்வளவு? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகழுவ தேவைப்படும் தண்ணீர் எவ்வளவு?

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகழுவ தேவைப்படும் தண்ணீர் எவ்வளவு? 



 கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகழுவுவதற்காக ஒரு நாளைக்கு தேவைப்படும் தண்ணீர் எவ்வளவு என்பது பற்றி விளக்குகிறார், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பருவகால மாற்ற ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் முனைவர் ப.மு.நடராசன். அவரது கருத்துகளை காண்போம்... 

  நீர் வழியாக பரவாது 

 கொரோனா நுண்ணுயிர்க்கிருமியின் உருவம், ஒரு மீட்டரை நூறு கோடி சம அளவாக பிரித்தால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவில்தான் இருக்கும். நீர் சார்ந்த வியாதிகளான காலரா, டைபாய்டு, வாந்தி, பேதி, குருதிப்பேதி போன்ற வியாதிகளால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 35 லட்சத்து 75 ஆயிரம் பேர் இறக்கிறார்கள், இதில் 22 லட்சம் பேர் குழந்தைகள். 

 அமெரிக்க நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, கொரோனா கிருமி குடிநீரில் இல்லை எனவும், குடிநீர் வழியாக இக்கிருமி மக்களை பாதிக்க வாய்ப்பு இல்லை எனவும், நீர் சார்ந்ததாக இருப்பின், இதை கிருமி நாசினியை பயன்படுத்தி அழிப்பது எளிது எனவும் கூறி உள்ளது. 

ஆகவே பிற வியாதிகள் போல இவ்வியாதி எளிதாக சாக்கடை நீர்வழியாக பரவாத காரணத்தால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மனித ஆற்றலையும் தாண்டி சிக்கல் நீடிக்கிறது. கொரோனா கிருமி நீர்வழியாக பரவாது. ஆனால் இக்கிருமி விலங்கினங்களை பாதிப்பது வாடிக்கை. அரிதாக சில சமயங்களில் விலங்குகளின் வழியாக மக்களுக்கும் பரவுகிறது. கொரோனா கிருமி எப்போது உற்பத்தியாகிறது என்பதை கூற இயலாது. 

சில சமயங்களில் இக்கிருமி உற்பத்தியாக வாய்ப்பே இல்லை. ஓர் குறிப்பிட்ட பருவத்தில் இக்கிருமி உற்பத்தியாக வாய்ப்பு இருப்பதாக இதுவரை அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கவில்லை. கொரோனா வியாதியில் இருந்து விடுபடுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊசி மருந்து இதுவரை தயாரிக்கப்படவில்லை. 

இதனால் கிருமி அழிப்பு மருந்துகளேயே மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். இக்கிருமி தொற்று ஏற்பட்டவர்கள் வறட்டு இருமல், தளர்ச்சி, தலைவலி, சில சமயங்களில் பேதி, சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இக்கிருமி ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு மூச்சுக்காற்று வழியாகப் பரவுவதால் ஒவ்வொரு நபரும் தம்மை தனிமைப்படுத்தி பாதுகாப்பதே சிறந்த வழி. எங்கெல்லாம் சுய கட்டுப்பாடு கடைபிடிக்கவில்லையோ அங்கு இறப்பு அதிகரிக்கிறது என்பதில் இருந்து இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ளலாம். 

  கைகழுவ தேவைப்படும் தண்ணீர்

சுத்தமான தண்ணீர் பருகாததாலேயே நீர் சார்ந்த வியாதிகளால் பெருமளவு மக்கள் இறக்கிறார்கள். நன்னீரை பருகாததால் வயிற்றுப் போக்கால் மட்டும் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து உள்ளது. 

 கொரோனா வியாதியை கட்டுப்படுத்துவதில் மக்கள் தம்மை தனிமைப்படுத்தி வாழ்ந்தால் மட்டும் போதாது குடிப்பதற்கு மட்டுமல்லாது கை கழுவவும் சுகாதாரத்துடன் இருப்பதற்கும் நன்னீர் தேவைப்படுகிறது. பிற வியாதிகளை கட்டுப்படுத்த தேவைப்படுவதைவிட கொரோனா வியாதியில் இருந்து உயிர்காக்க கூடுதல் நீர் தேவைப்படுகிறது. பொதுவாக தனிநபர் அன்றாடம் பருகத் தேவைப்படும் நன்னீர் 3 முதல் 5 லிட்டர். உயிர்காக்கும் நீர் 15 லிட்டர், அடிப்படை தேவைகளுக்கான நீர் 50 லிட்டர். எனவே கண்டிப்பாக தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. 

 தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, கொரோனா நோயை கட்டுப்படுத்த தெரிவித்த 10 உறுதிமொழிகளில் 8-வது உறுதிமொழி, ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை 20 நொடிகளுக்கு கைகளை நன்கு கழுவ வேண்டும் என்பது. ஒவ்வொரு தடவை கை கழுவுவதற்கும் குறைந்தது இரண்டு லிட்டர் நன்னீர் தேவைப்படும் என்ற கணக்குப்படி, ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை கைகழுவ தனிநபருக்கு 20 லிட்டர் முதல் 30 லிட்டர் நன்னீர் தேவைப்படும் என்பது தெரிகிறது. 

  கரியமிலவாயு குறைந்தது 

 தமிழகத்தில் தற்போது வாழும் 8.2 கோடி மக்களுக்கு ஒரு நாளைக்கு கை கழுவ மட்டும் 246 கோடிலிட்டர் நீர் தேவை. இக்கொடிய நோயை கட்டுப்படுத்த 3 மாதங்கள் ஆகும் என்றால், இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களுக்கும் ஒருநாள் தேவைப்படும் நன்னீர் 2,600 கோடி லிட்டர் முதல் 3,900 கோடி லிட்டர். குடிப்பதற்கே தொடர்ந்து நன்னீர் கிடைக்காத இந்த நேரத்தில் கைகழுவ நன்னீருக்கு என்ன செய்வது சிந்திக்க வேண்டும். 

 கொரோனா பாதிப்பின் காரணமாக 25 சதவீதம் அளவுக்கு புதைபடி எரிசக்தி (பெட்ரோல், டீசல், நிலக்கரி) பயன்பாடு குறைந்ததால் 50 கோடி டன் கரியமில வாயு உற்பத்தி குறைந்தது. ஐரோப்பிய நாடுகளில் 40 கோடி டன் கரியமில வாயு உற்பத்தி குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது. நைட்ரஸ் ஆக்சைடு உலக அளவில் 40 சதவீதம் குறைந்து உள்ளது. இது மட்டுமின்றி வாகன போக்குவரத்து குறைந்ததால் கார்பன் மோனாக்சைடு கணிசமான அளவு குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக புவி வெப்ப உயர்வு குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. கங்கை போன்ற ஆறுகளில் ஓடும் தண்ணீர் நன்னீராகி வருகின்றது. 

  ஆய்வுக்கு முன்னுரிமை 

 உலக பொருளாதார வளர்ச்சி 413 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக பசுமை இல்ல வாயு குறைவது ஏற்புடையது அல்ல. இயற்கையாகவே ஒவ்வொரு நாடும் பசுமை இல்ல வாயுகள் அளவை குறைத்து உலக வெப்ப உயர்வை, கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 21-ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள அறிவியல் வளர்ச்சி, கண்ணுக்கு தெரியாத நோய்க்கிருமியை கட்டுப்படுத்தாத நிலையில், அணு ஆயுதங்கள் தயாரித்து அழிவுப்பாதையில் செல்லாமல் மக்கள் நலன் காக்கும் ஆய்வுக்கு அனைத்து நாடுகளும் முன்னுரிமை வழங்க வேண்டும். 



 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment