தினம் ஒரு தகவல் தரமான அஸ்திவாரம் எது? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினம் ஒரு தகவல் தரமான அஸ்திவாரம் எது?

தினம் ஒரு தகவல் தரமான அஸ்திவாரம் எது?


அஸ்திவாரம் என்பது கட்டிடங்கள் மிக உறுதியாக காலங்கள் கடந்து நீடித்து நிலைக்க உதவுவது. கட்டிடங்களில் பழுது, பலவீனம் என்றால் அதை சரிசெய்கிறோம். ஆனால் கட்டிடங்களின் தரையின் கீழ் ஏற்படும் சீர்கேடுகளையும் அஸ்திவார பழுதுகளையும் சோதிக்கவோ, நீக்கி மறுசீரமைக்கவோ எளிதான, பாதுகாப்பான, நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளை கண்டறிய ஆய்வுகளே இனிமேல்தான் தொடங்கப்பட வேண்டும். 

இதையும் படிக்கவும்
இயற்கை முறையில் தற்காத்து கொள்வது எப்படி?

இது மிகவும் கசப்பான உண்மை. அஸ்திவாரத்தில் பல வழிகளில் பழுது ஏற்படும். அவற்றுள் மூன்று முக்கிய வகையை சொல்லலாம். முதல் வகை, வடிவமைப்பு குறைபாடு, மூலப்பொருட்களில் தர குறைபாடு, பொருள்சேர்க்கைகளில் நேரும் விகிதாசார தவறுகள் மற்றும் தரமான கட்டுமான முறைகளை பின்பற்றாமை போன்றவை முதல் வகை.

 இரண்டாம் வகை, மண்ணின் தாங்கும் திறனை தீர்மானிக்க உதவும் மண்பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருப்பது, அக்கறையின்மையோடு நடத்தப்படும் சோதனைகள், குளங்கள், ஏரிகள், விவசாய நிலங்கள் போன்ற தாழ்வான பகுதிகளை தூர்த்துவிட்டும், சரிவான, ஏற்றத்தாழ்வான பகுதிகளை சமன் செய்துவிட்டும் கட்டப்படும் கட்டுமானங்களில் போதிய தொலைநோக்குப் பார்வை முன்னெச்சரிக்கை இல்லாமை ஆகியவை இரண்டாம் வகை காரணங்கள். 

 மூன்றாம் வகை, கட்டிடங்களில் இருந்து கழிவு நீர் தங்கு தடையின்றி வேகமாக வெளியேற முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அமைக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்று. அதுபோலவே வெளியிலிருந்து வரும் நீர் மற்றும் ஈரக்கசிவு கட்டுமானத்தை அணுக முடியாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். 

மேலும் கட்டிடங்களுக்கு அருகே மரம் வளர்க்க விரும்புவோர் கட்டிடங்களில் இருந்து குறைந்தது 10 அடி இடைவெளி விடவேண்டும். இல்லாவிட்டால் மரத்தின் வேர்கள் அஸ்திவாரத்தை பாதிக்கும். கழிவுநீர் மேலாண்மையில் ஏற்படும் குறைபாடுகளோடு புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இடர்களும் அஸ்திவார பழுதுகளை உண்டாக்கும். இவை மூன்றாம் வகை முக்கிய காரணிகளாக திகழ்கின்றன. 

 அஸ்திவாரத்தில் ஏற்படும் பழுது அல்லது அஸ்திவாரத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தரையில் ஏற்படும் சீர்கேடுகள், மண் நெகிழ்ந்து, தரை தளர்ந்து, தாங்கும் திறனை இழத்தல் என்பது கிட்டத்தட்ட மனிதனுக்கு ஏற்படும் புற்று நோய்க்கு ஒப்பானது. இம்மாதிரி நோய் கண்ட கட்டிடத்தின் தரைக்கு கீழ்ப்பகுதியில் சீர்கேடற்ற கட்டிடம், வெளிப்பார்வைக்கு நல்ல தோற்றத்தை தந்தாலும், வெள்ளம், மழை, புயல் நிலநடுக்க சமயத்தில் தாக்குப்பிடிக்க இயலாது. 


குறுகிய காலத்திலேயே இதய மாற்று சிகிச்சை வரையிலான விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ள நம்மால் பல்லாயிர வருட அனுபவத்திற்கு பின்னரும் அஸ்திவாரம், அடித்தரை பகுதிகளை பாதுகாப் பாக மறுசீரமைக்க முடியாது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். 



 மண்பரிசோதனை, மண்ணின் தன்மைக்கேற்ற சரியான வடிவமைப்பு, தரமான கட்டுமானப்பொருட்கள், அவற்றின் சரியான விகிதாசாரத்துடன் கூடிய சேர்க்கை, நன்கு திட்டமிடப்பட்ட கழிவுநீர் மேலாண்மை இவற்றோடு, தரமான கட்டுமான முறைகளைப் பின்பற்றி கட்டப்படும் கட்டிடமே தரமான அஸ்திவாரத்தை கொண்டதாக இருக்கும்.

No comments:

Post a Comment

Please Comment