குழந்தைகளையும் புத்தகம் படிக்க வைப்போம்! இன்று உலக புத்தக தினம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளையும் புத்தகம் படிக்க வைப்போம்! இன்று உலக புத்தக தினம்

குழந்தைகளையும் புத்தகம் படிக்க வைப்போம்! இன்று உலக புத்தக தினம்  
குழந்தைப் பருவம் கொண்டாட்டமானது. அந்த கொண்டாட்ட மனநிலை சற்று மாறி குழந்தைமையை தொலைத்து விட்டு வயதிற்கு மீறிய முதிர்ச்சியை இன்றைய பெரும்பான்மையான குழந்தைகளிடம் காண முடிகிறது. பெருகி வரும் சமூக ஊடகத்தின் தாக்கமே இதற்கு காரணமாக உள்ளது. 

 படிக்கும் பழக்கம் குழந்தைகளிடம் அருகிப் போய் விட்டது. அதற்கான ஆர்வத்தை பெற்றோரும் ஏற்படுத்துவதில்லை. புத்தகம் என்றாலே அது பாடப் புத்தகம் மட்டுமே என்ற சிந்தனையே பலரிடம் உள்ளது. அதனாலேயே அதனைப் பெரிதாக கண்டு கொள்ளாத பெற்றோராக மாறி வருகிறோம்.

  கற்பனைத்திறன் 

 பெரியவர்களிடமே வாசித்தல் இல்லை எனும் போது குழந்தைகளை எப்படி பழக்கப் படுத்த முடியும். அவர்களின் கைகளில் அலைபேசி இருப்பதைக் கண்டு அதிசயிப்பதில்லை நாம். காட்சி வடிவிலேயே காணும் குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் வளர்வதில்லை. வாசித்தல் அற்புதமான அனுபவம். இதைத் தான் வள்ளுவரும் நவில் தோறும் நுால்நயம் போலும்பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு' என்று கூறியிருப்பார். நல்ல நுால்கள் படிக்க படிக்க இன்பம் தருவது போல பண்புடையவர்களின் நட்பும் இன்பம் தருவதற்கு புத்தகம் படித்தலை வள்ளுவர் உவமையாக கூறியிருப்பார். 

  குழந்தை பருவம் 

  குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும். வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது. படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும்

  குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது புத்தகங்களே. 

  ஒருமுகப்படுத்தும்@ வழிகாட்டி 

புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம்சிந்தனையைத் துாண்டவும்,சிந்தனையைப் புதுப்பிக்கவும் 

உதவுவது புத்தகங்கள். நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்ள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன. 

  கீழிருந்து மேலாக 

புத்தகங்களை நாம் மேலிருந்து கீழ் நோக்கி வாசிக்கிறோம். அவை நம்மை கீழிருந்து மேலாக உயர்த்துகிறது.முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.

  சில புத்தகங்கள் நம்மை அழ வைக்கும். சில எழ வைக்கும். சில நம்மோடு பேசும்.சில புத்தகங்கள் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.அன்பையும், நல்லொழுக்கத்தையும், மனித நேயத்தையும் வளர்த்தெடுக்கும். இப்படி தன்னை நாடி வருபவருக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத் தரும் புத்தகத்தை வாசித்து முடித்து விட்டு செல்லும் போதே நம்மையும் அறியாமல் ஏதோ ஒரு மாற்றம் நமக்குள் நிகழ்வதை உணர முடியும். அந்த ஆற்றல் எப்போதும் புத்தகங்களிடம் உண்டு. 

  மனநிறைவு நிறை 

குடமாய் ததும்பாது வீற்றிருக்கும் புத்தகத்தை படிக்கும் குழந்தையின் மனம் நிறைவாக இருப்பதை உணர முடியும்.வாள் முனையை விட பேனா முனையே சமூகத்தைப் புரட்டிப் போடும் ஆயுதம். அதனால் தான் பாரதி ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியதோடு மட்டுமல்லாமல் தன் எழுத்துகளால் ஆங்கிலேயனை அலற வைத்தான். அம்பேத்கரின் பேனா முனை தலை குனிந்ததாலே, சமூகம் தலை நிமிர்ந்தது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதி வைத்து விட்டுப் போன வள்ளுவனின் எழுத்துகளே இன்றும் வாழ்வியலாக அமைந்திருக்கிறது.

  பேசும் பேச்சுகள் 

எல்லாம் காற்றோடு போகும். ஆனால் எழுத்துக்களோ காலம் கடந்தும் நிற்கும் வல்லமை வாய்ந்தது என்பதையே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இலக்கியங்களும், புராணங்களும், காப்பியங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

  நீதி நுால்கள் 

  மனிதனை நல்வழிப் படுத்துவதற்கான விஷயங்கள் பலவற்றையும் நீதிநுால்கள் தந்து விட்டுச் சென்றுள்ளன. அறநெறியையும் ஆன்மிகப் பாதையையும் காட்டக் கூடியது புத்தகங்கள். அதனால் தான்துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம் என்கிறார் மார்ட்டின் லுாதர் கிங்.ஆரம்ப கால கட்டத்தில் குழந்தைகள் எளிதாக வாசிக்க கூடிய சிறு சிறு வாக்கியங்கள் அடங்கிய புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். நுாலகத்திற்கு 

  அழைத்துச் சென்று பரந்து விரிந்து கிடக்கும் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களைப் பற்றிப் பேசலாம். நாளிதழ் படிக்க சொல்லலாம். நாளிதழின் சிறுவர் இணைப்பு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யலாம்.இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பொது அறிவை மேம்படுத்தும். 

  நாளிதழ் படித்தால் 

  நாம் நாளிதழ் படித்தாலே, அவர்களும் நம்மைக் கவனித்து நாளிதழ் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். படிப்பாளியால் மட்டுமே நல்ல படைப்பாளியாக உருவாக முடியும். 

  உடலுக்கு உடற்பயிற்சி போல மனதிற்குப் பயிற்சி தருவது புத்தக வாசிப்பு என்று அறிஞர் சிக்மண்ட் பிராய்ட் கூறுகிறார்.நம் பிள்ளைகளை வாசிப்பு என்னும் உலகிற்கு அழைத்துச் செல்வோம். உலகில் வாழ்ந்து மறைந்த பலரும் நுால்கள் வழியாகத் தான் தங்கள் வாழ்வின் வெளிச்சத்தை துவங்கியிருக்கிறார்கள்.சாதாரண மனிதர்களையும் சரித்திர மனிதர்களாக மாற்றுவது புத்தகங்கள் தான். நம் வீட்டில் கூட வள்ளுவனைப் போல, பாரதியைப் போல, சிந்தனையாளர்கள் உருவாகலாம். அத்தகைய சிந்தனையாளர்களை உருவாக்கத் தேவை நாம் தரும் புத்தகங்கள் தான். வாசிப்பு வாழ்க்கையை வசமாக்கும். வாழ்க்கையை வசந்தகாலமாக மாற்றும். வருங்கால பாரதத்தை வாசிப்பால் சுவாசிக்க வைப்போம். -

ம.ஜெயமேரி, ஆசிரியை 
  ஊ.ஒ.தொடக்க பள்ளி 
க.மடத்துப் பட்டி. 



துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment