தந்தையை 1,200 கி.மீ. சைக்கிளில் அழைத்து சென்ற மகள்
தேர்வுப் போட்டியில் பங்கேற்க தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு அழைப்பு
புதுடெல்லி
கரோனா பிரச்சினையால் ஊரடங்கு அமலில் உள்ளதால், 1,200 கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்துச் சென்ற மாணவியை தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள வருமாறு தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராம் பகுதியில் வசிப்பவர் 15 வயதான ஜோதி குமாரி.
இவரது தந்தை உடல்நலம் குன்றி இருந்தார். கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இவர்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனால் ஊர் திரும்ப முடிவு செய்தனர். பஸ், ரயில் வசதி இல்லாததால் தந்தையை தனது சைக்கிளில் பின்னால் அமர வைத்து சொந்த மாநிலமான பிஹாருக்கு அழைத்துச் சென்றார் ஜோதிகுமாரி.
சுமார் 1,200 கி.மீ. தூரத்தை 8 நாட்களில் கடந்தார் ஜோதி குமாரி.
உடல்நலம் பாதித்த தந்தையை, சொந்த ஊருக்கு சைக்கிளில் அழைத்து வந்த மாணவி ஜோதி குமாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக அனைத்து சமூக வலைதளங்களிலும் இவரது சாதனை செய்தி பகிரப்பட்டது.
அதே நேரத்தில் தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு தங்களது மையம் சார்பில் நடைபெறும் சைக்கிள் பந்தய தேர்வுப் போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த தேர்வுப் போட்டியில் அவர் வெற்றி பெற்றால் டெல்லியில் உள்ள தேசிய சைக்கிள் பந்தய அகாடமியில் முறையான பயிற்சி வழங்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் இந்த அகாடமி இயங்கி வருகிறது.
இதுகுறித்து ஜோதியின் தந்தை கூறும்போது, “குருகிராமில் வேலை இல்லாததால் நாங்கள் ஊர் திரும்ப முடிவு செய்தோம்.
உடல் நலம் குன்றி இருந்ததால் எனது மகளே சைக்கிளில் செல்லலாம் என்று தெரிவித்தார். அதன்படியே வந்து சேர்ந்தோம். அவர் மிகவும் தைரியசாலி” என்றார்.
தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கார் சிங் கூறும்போது, “8-ம் வகுப்பு மாணவியான ஜோதிகுமாரி, தேர்வுப் போட்டியில் வென்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.
2இதுதொடர்பாக அவருடன் பேசியுள்ளோம். அடுத்த மாதம் அவர் டெல்லிக்கு அழைக்கப்படுவார். அவரது அனைத்து பயணச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்” என்றார். - பிடிஐ
No comments:
Post a Comment
Please Comment