காயம் அடைந்த தந்தையை பின்னால் அமர வைத்து
1200 கி.மீ. சைக்கிள் ஓட்டி சாதித்த சிறுமிக்கு டிரம்ப் மகள் பாராட்டு
காயம் அடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டிய சிறுமி ஜோதிகுமாரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் நெகிழ்ச்சியுடன் பாராட்டி இருக்கிறார்.
15 வயது சிறுமி ஜோதிகுமாரி
அரியானா மாநிலம், குர்கானில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த மோகன் பஸ்வான் என்பவரது வாழ்வு, கொரோனா ஊரடங்கால் பறிபோனது.
இந்த நிலையில் ஒரு விபத்தில் அவர் காயமும் அடைந்தார்.
வாழ்வாதாரம் இழந்த நிலையில், பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பிவிடலாம் என்றால் ஊரடங்கால் ரெயில் போக்குவரத்து இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் மோகன் பஸ்வான் தனது கையில் இருந்த பணத்தை கொண்டு ஒரு சைக்கிள் வாங்கி 15 வயது மகள் ஜோதி குமாரியின் கையில் கொடுத்தார்.
அந்த மகள், பின்னால் தந்தையை உட்கார வைத்துக்கொண்டு 7 நாட்கள் இரவும், பகலும் சைக்கிளை ஓட்டி, 1,200 கி.மீ. தொலைவை கடந்து சொந்த கிராமத்துக்கு போய்ச் சேர்ந்து இருக்கிறார்.
இது பற்றிய செய்தி, படங்களுடன் ஊடகங்களில் செய்தியானது.
பயிற்சியாளராகும் வாய்ப்பு
இதைப் பார்த்து வியந்து போன டெல்லி தேசிய சைக்கிள் பெடரேசன், ஜோதிகுமாரியை வரவழைத்து அவரது சைக்கிள் ஓட்டம் திறனை பரிசோதித்து, அவரை பயிற்சியாளராக்க திட்டமிட்டுள்ளது.
ஊரடங்கு முடிந்த உடன் டெல்லி வருமாறு ஜோதிகுமாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் மட்டும் அந்த சிறுமி தேர்ச்சி பெற்று விட்டால் தேசிய சைக்கிள் பெடரேசனின் பயிற்சியாளராக வாய்ப்பு இருக்கிறது.
இது அவரது தலையெழுத்தையே மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவாங்கா டிரம்ப் நெகிழ்ச்சி
இந்த செய்தி உலகமெங்கும் உள்ள மக்களை ஈர்த்தது. 15 வயது சிறுமியின் மன உறுதியும், உடல் திறனும், தந்தை மீதான அன்பும் அனைவரையும் நெகிழ வைத்தது.
இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் விதிவிலக்கல்ல. அவரும் ஜோதி குமாரியின் செயல் குறித்து ஊடகங்களின் மூலம் அறிந்தார். அந்த சிறுமி, காயம் அடைந்த தனது தந்தையை ஏற்றிக்கொண்டு 1200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிளை ஓட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு போய்ச் சேர்ந்தது அறிந்து அவர் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார்.
அதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஜோதிகுமாரியை நெகிழ்ந்துபோய் பாராட்டி இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
15 வயதே ஆன ஜோதி குமாரி, காயம் அடைந்த தனது தந்தையை தனது சைக்கிளின் பின்புறத்தில் அமர வைத்து 7 நாட்களுக்கு மேலாக 1200 கி.மீ. தொலைவுக்கு ஓட்டிச்சென்று சொந்த கிராமத்தை சென்றடைந்துள்ளார்.
எதையும் தாங்கும் ஆற்றலையும், அன்பையும் கொண்ட இந்த அழகிய சாதனை, இந்திய மக்கள் மற்றும் சைக்கிள் பெடரேசனின் கற்பனை வளத்தையும் படம் பிடித்து காட்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment