தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்  

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை. 

12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது. 

பலமுறை ஒத்திவைக்கப்பட்ட திருத்தும் பணி மீண்டும் நாளை தொடங்குகிறது. 48 லட்சம் விடைத்தாள்கள் 200 மையங்களில் நாளை முதல் நடைபெறுகிறது. 

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை. இங்குள்ள விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். 

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்துள்ளது. கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு மறுமுறை பயன்படுத்தக்கூடிய 3 முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது. மையங்களில் ஆசிரியர்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதியில் ஆசிரியர்கள் இருந்தால், அவர்களுக்கு இந்த பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். 

இந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்துள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணி தவிர்க்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் தலைமை கண்காணிப்பாளர் 6 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள். 

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறும்போது, 

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 60 ஆயிரம் முகக்கவசங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியை கைகளில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். மையங்களில் ஆசிரியர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றார். 

விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களுக்கான விடைத்தாள்கள் காலையில் 15, மாலையில் 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். மற்ற முக்கிய பாடங்கள் காலையில் 10, மாலையில் 10 விடைத்தாள்கள் திருத்தம் செய்வார்கள். 

ஆசிரியர்களுக்குத் தேவையான வசதிகளையும், கிருமி நாசினி, முகக்கவசம் போன்றவற்றை முறையாக வழங்கி கொரோனாவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திய பின்னர், 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும். 


15 நாட்களுக்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஜூன் 3-வது வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment