தொழில்நுட்ப அலுவலகங்களில் கொரோனா கொண்டு வந்த மாற்றங்கள்
சர்வதேச அளவில் கொரோனா கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் கணக்கில் அடங்காதவை. வாழ்க்கை முறை, மருத்துவம், கல்வி, சுகாதாரம், பயணம் என அனைத்து தளங்களிலும் கொரோனாவின் பாதிப்பு பெருமளவில் இருக்கிறது.
தொழில்நுட்ப அலுவலகங்களில் இந்த கிருமி கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் கணிசமானவை. தொழில்நுட்பத்தின் உச்சத்தில் உலகம் இருந்த போது கண்ணுக்குத் தெரியாத கிருமி வந்து தனது நெம்பு கோலால் உலகைப் புரட்டியிருக்கிறது.
உலகத்தை தனது சுருக்குப் பையில் போட்டதாக தொழில்நுட்பம் கர்வம் கொண்ட கணத்தில் கொரோனா வந்து, தொழில்நுட்பத்தின் சிகரங்களைச் சுருட்டி அறைகளில் அடைத்திருக்கிறது.
இந்த சர்வதேசப் பாதிப்பு தொழில்நுட்ப அலுவலகங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் வெறும் தற்காலிக மாற்றங்கள் அல்ல.
இவை நிரந்தர மாற்றங்களாக நிலைக்கவும் வாய்ப்பு உண்டு என்பது கவனிக்கத்தக்கது. அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.
1. வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை பெரும்பாலான நிறுவனங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு வராவிட்டால் வேலை செய்ய முடியாது என நம்பிக் கொண்டிருந்த மிக முக்கியமான பணிகள் கூட வீடுகளிலிருந்து இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் பயண நேரமும், பயண சோர்வும் தவிர்க்கப்படுவதால் பணிகள் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை நிரந்தரம் ஆக்கலாமா என யோசிக்கத் துவங்கியிருக்கின்றன.
2. நேருக்கு நேர் பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும் எனும் செயல்களெல்லாம்டிஜிட்டல் வெளியில் சாத்தியமாகிறது. சமீபத்தில் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியது, இந்த கொடுக்கல் வாங்கல் கையகப்படுத்துதல் அனைத்துமேடிஜிட்டல் வெளியிலேயே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்களின் முக்கியமான சந்திப்புகள் எல்லாம் இன்றைக்குடிஜிட்டல் வழியாகவே நடக்கின்றன. ஏராளமான வீடியோ உரையாடல் செயலிகள் இப்போது முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
3. இணைய பயன்பாடும், இணைய வேகமும் மிக முக்கியமாகி இருக்கிறது. அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களும் இணைய வெளியில் நடைபெறுவதால் இதில் பற்றாக்குறையும் உருவாகியிருக்கிறது. எனவே வீடியோ படங்களை ஒளிபரப்பும்டிஜிட்டல் சேனல்கள் தங்களது தரத்தை மீடியம் அளவில் வைத்திருக்க வேண்டும் எனும் கோரிக்கையையும் நிறுவனங்கள் முன் மொழிகின்றன. இதன் மூலம் தொழில் சார்ந்த இணையப் பயன்பாடுகள் தடைபடாது என்பது அவர்களது நம்பிக்கை. இந்த ஏரியாவில் புதுமையாக யோசிக்கும் புது நிறுவனங்கள் களமிறங்கத் துவங்கியுள்ளன.
4. பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது. தாய்மையினாலும், குழந்தைப் பராமரிப்புக்காகவும், வீட்டு வேலை காரணமாகவும் அலுவலக வேலையை விட்ட பெண்கள் மீண்டும் வேலையில் நுழையவும், வீடுகளிலிருந்தே வேலை செய்யவும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. திறமையான, பயணம் செய்ய முடியாத, உடலளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களும் கூட வீடுகளிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
5. தலைமை பண்புகளும் வெகுவாக மாற்றமடைந்துள்ளன. ஊழியர்களோடு இணைந்து செயல்பட “எமோஷனல் பேலன்ஸ்” எனப்படும் ‘உணர்வுகளை சமநிலைப்படுத்தும் திறமையுடைய’ தலைவர்கள் தேவையாகியிருக்கின்றனர். வேலைக்காக மெட்ரோ சிட்டிகளில் மக்கள் தேனீக்களை போலக் குவியும் நிலை எதிர்காலத்தில் மாறும். கிராமங்களிலிருந்தும் வேலை செய்யும் சூழல் உருவாவதால், வாழ்க்கைத் தரம் மேம்படும். நெரிசல் நகரங்கள் மூச்சு விடும். மாசுகளின் அளவு நிச்சயம் குறையும். இப்படி பல்வேறு நன்மைகள் படிப்படியாக உருவாகும். அதேபோல உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்துதான் தொழிலை வளர்க்க வேண்டும் எனும் நடைமுறையையும் இந்த கொரோனா காலம் உடைத்துக் காட்டியிருக்கிறது. எனவே ஏராளமான அலுவல் பயணங்கள் தவிர்க்கப்படும் என்பதும் நிதர்சனம்.
6. பல்வேறு புதிய தொழில்கள் இந்த மாற்றத்தின் மூலமாக உருவாகும். உதாரணமாக மொபைல் ஆப்ஸ்களின் வருகை இன்னும் அதிகரிக்கும், பழைய பிரவுசிங் செண்டர்களைப் போல ‘பயன்கொடுத்து பயன்படுத்து’ எனும் தற்காலிக பணி நிலையங்கள் உருவாகும். ஆன்லைன் மூலமாக மட்டுமே இயங்கும்டிஜிட்டல் நிறுவனங்கள் வளரும். அலுவலகத்துக்கு இடமே தேவையில்லை எனும் புதிய முறை இன்னும் அதிக வேகமாய்ப் பரவும்.
7. வீடுகளிலிருந்தே தொடர்ந்து வேலை செய்வது உளவியல் ரீதியாக ஊழியர்களைப் பாதிக்கும் எனுக் கவலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா தெரிவித்திருந்தார். ‘லாக் டவுன்’ மக்களை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் செய்திருப்பதால் மன ரீதியான பாதிப்புகள் நிகழலாம், ஆனால் இந்த லாக்டவுன் முடிந்த பின் வீடுகளிலிருந்து வேலை செய்வது உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்காது என்பதே உண்மையாகும்
8. நிறுவனங்களை விட்டு பணியாளர்கள் விலகும் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்கிறது ஆய்வு ஒன்று. பயண நேரம், கட்டாய வேலை நேரக் கட்டுப்பாடுகள், தனிப்பட்ட காரணங்கள், அலுவலகத்தின் மோசமான சூழல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வேலையை விட நினைத்திருப்பவர்கள் தங்களுடைய முடிவை மாற்றிக் கொள்கின்றனர். காரணம் இந்த புதிய வகையில் வேலையும், வாழ்க்கையும் இணைந்து பயணிக்கும்.
9. கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் பெரும்பாலான தகவல் சேமிப்புகளை தனக்குள் அரவணைத்துக் கொள்ளும். ஆட்டோமேஷன், ரோபோட்டிக்ஸ் போன்றவை இன்னும் அதிக வேகத்தில் பயணிக்கும் என்பதையே பெரும்பாலான நிறுவனத்தின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். நேரடி கண்காணிப்பு தேவைப்படும் ‘லெகசி’ சிஸ்டம் எனப்படும் பழைய கால முறைகள் மாறி புதிய டெக்னாலஜிகள் நிரம்பும். கூடவே, மென்பொருள் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment
Please Comment