தினம் ஒரு தகவல் வீட்டுக்குள்ளும் காற்று மாசு
சுற்றுப்புற சூழலில் மாசுபாடு என்றதுமே நாம் பொதுவாக வெளி உலகத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். ஆனால் சுற்றுச்சூழல் என்பது நாம் வசிக்கிற வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது.
அதில் மாசு குறைவு ஏற்பட்டால் விபரீத விளைவுகள் உண்டாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உணர்வு ஏற்படாத காரணத்தினால் வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசுபட்டு அதனால் பலவிதமான நோய் தொல்லைகள் ஏற்படுகின்றன.
வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசடைந்தால் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், உடலில் எரிச்சல், மயக்கம், வாந்தி, கண்ணில் கோளாறு போன்றவை ஏற்படும்.
கட்டை, கரி, மண்எண்ணெய் ஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்துகின்ற கிராமத்து மக்கள் காற்று மாசுபாடு குறித்து அறிந்துகொள்ள வேண்டும். புகையும், கரியும் வெளியே செல்ல போதுமான ஜன்னல் வசதி இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுப்பில் இருந்து வெளிப்படும் புகையானது மூச்சடைப்பு, இருமல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
நாளடைவில் ஆஸ்துமா, நுரையீரல் நோய் ஆகியவை தோன்றும். எனவே இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.
நாம் வீட்டுக்குள்ளே இருக்கும்போது மிகவும் சுகமாக இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வில் சிறிய மாறுதல்களை கவனிக்காமல் இருப்பது வழக்கம்.
ஆனால் முன்எச்சரிக்கையோடு சில மாறுதல்களை கவனிக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக பெரிய ஆபத்துகளை தடுக்க முடியும்.
உதாரணமாக வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்றில் அதிக அளவு ஈரப்பதம், புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்கோ அல்லது புதிய வீட்டுக்கோ சென்ற உடன் உடலில் ஏற்படும் மாறுதல்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கு புதிய வண்ணம் பூசிய உடன் அடிக்கடி ஏற்படும் தும்மல், கண் எரிச்சல், வீட்டுக்குள்ளே இருப்பதைவிட வெளியே இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருத்தல் போன்றவற்றை சரியாக கவனிப்பதன் மூலமாக வீட்டுக்குள்ளே உண்டாகும் காற்றுமாசை கட்டுப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் முடியும்

No comments:
Post a Comment
Please Comment