மாணவிகளின் மதிப்புக்குரிய சேவை
பெங்களூருவைச் சேர்ந்த இரு மாணவிகள் இணைந்து, புலம்பெயர்ந்த பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கு ‘நாப்கின்’ உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
தியா, நிகேதா என்ற அந்த மாணவிகள், பத்தாம் வகுப்பு பயில்கின்றனர். கே.ஜி. ரோடு மற்றும் கொரமங்களா பகுதியைச் சேர்ந்த தியாவும் நிகேதாவும், தங்கள் பகுதியில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை கொண்டனர். உடனே, சமூக வலைதளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கினர்.
“எங்களுடன் படிக்கும் சக மாணவிகள் மற்றும் முன்பின் தெரியாத பலரின் உதவியால், நாங்கள் ஒரே வாரத்தில் 80 ஆயிரம் ரூபாய் திரட்டிவிட்டோம். அதைக் கொண்டு, சானிடரி நாப்கின் பேடுகள், சோப்கள், ஷாம்பூ பாக்கெட்டுகள், முக கவசங்கள் போன்றவற்றை வாங்கினோம். இவை அடங்கிய ஆயிரம் தொகுப்புகளை பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கினோம். பிரதானமாக கொரமங்களா பகுதியில் பணிபுரிவோருக்கு இவற்றை அளித்தோம்.
உள்ளூர் போலீசாரை தொடர்புகொண்டு, இப்பகுதியில் எத்தனை பெண் துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தோம். அவர்கள் அனைவருக்குமே சுகாதாரப் பொருள் தொகுப்புகளை வழங்கிவிட்டோம். நாப்கின் உள்ளிட்டவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, எப்படி பாதுகாப்பாக இருப்பது என்றும் ஆலோசனைகளை வழங்கினோம்.
இந்தப் பொருட்களை சுமார் ஒரு மாதகாலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். நாங்கள் வழங்கியுள்ள முக கவசங்களையும் துவைத்து மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம்” என்கின்றனர், தியாவும் நிகேதாவும்.
அவர்களே தொடர்ந்து, “சுகாதார பெண் பணியாளர்கள் பலருக்கும், மாதவிலக்கு காலத்தில் நாப்கின் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. அதன் அவசியம், சுய சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினோம்.
நாப்கின்களுக்கு மாதமாதம் செலவழிக்க வேண்டியிருப்பதால்தான் அப்பெண்கள் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். எனவே, மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க துணி நாப்கின்களை வினியோகிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்கின்றனர்.
இவர்கள் மேலும் நிதி திரட்டி, பெங்களூருவின் பிற பகுதிகளுக்கும் தங்கள் சேவையை விரிவுபடுத்த எண்ணியுள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment