கொரோனா நோயாளிகளை உற்சாகப்படுத்தும் அன்புத் தேவதை
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் சோர்ந்து போயிருப்பவர்களை உற்சாகப்படுத்தும் உன்னதப் பணியில் இறங்கியிருக்கிறார் ஓர் இந்தியப் பெண்.
ஹிதா குப்தா என்ற அந்தப் பெண், பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கோன்ஸ்டகா உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கிறார். சமூக சேவையில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர், ‘ஒரு நாளை பிரகாசப்படுத்துதல்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
தற்போது ஹிதா குப்தா, கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், முதியோர், குழந்தைகளுக்கு, உற்சாகமூட்டும் வார்த்தைகளுடன் கூடிய வாழ்த்து அட்டைகளை தானே கைப்படத் தயாரித்து அனுப்புகிறார்.
மேலும் அவர்கள், நோய், தனிமையை மறந்து பொழுதைக் கழிக்கும் வகையில் புதிர், கதைப் புத்தகங்கள், வண்ணம் தீட்டும் ஏடுகள், கலர் பென்சில் பாக்கெட்டுகளையும் அனுப்பி வருகிறார்.
இதுகுறித்து ஹிதா குப்தா கூறும்போது, “நமது முதியவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இந்த நிச்சயமற்ற நிலையில் அவர்கள் மேலும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். அம்முதியோர் தனிமையில் இல்லை என்பதை உணர்த்த வேண்டியது நம் பொறுப்பு.
பெரும்பாலும் எனது சொந்தப் பணத்தில்தான் அவர்களுக்கு பரிசு பார்சல்களை அனுப்பி வருகிறேன். இப்போது உள்ளூரில் உள்ள 16 மருத்துவமனைகளுக்கு இப்படிச் செய்து வருகிறேன். பரிசுத் தொகுப்புகளுடன், எனது 9 வயது தம்பி திவித் குப்தா எழுதித் தரும் உற்சாகக் குறிப்புகளையும் கூட அனுப்புகிறேன்” என்றார்.
உள்ளூர் மட்டுமின்றி, 7 மாகாணங்களில் 50 மருத்துவமனைகளில் உள்ள முதியோர், குழந்தைகளையும் தங்கள் அன்புக்கரங்கள் சென்றடைந்திருப்பதாகச் சொல்கிறார், இந்த அன்புத் தேவதை.
No comments:
Post a Comment
Please Comment