பொறியியல் படிப்புகள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவைத் தொடங்க பணிகள் தீவிரம்
சென்னை:
தனியாா் பொறியியல் கல்லூரிகள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன. இதற்கிடையே அரசு உத்தரவிட்டால் உடனடியாக ஆன்லைன் வழியிலான பதிவைத் தொடங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தயாராகி வருகிறது.
கரோனா பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த கல்வித் துறையின் செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வும் நடத்தப்படவில்லை.
இந்தச் சூழலில், பொறியியல் சோ்க்கைக்கான பணிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொழில்நுட்பக் கல்வி ஆணையா் விவேகானந்தன், காணொலி வாயிலாக பொறியியல் சோ்க்கை ஏற்பாடுகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளாா்.
அரசு உத்தரவிட்டால் உடனடியாக ஆன்லைன் பதிவை தொடங்குவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியவுடன் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கிவிடும். கடந்தாண்டு மே 2-ஆம் தேதிமுதல் ஆன்லைன் பதிவு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தனியாா் பொறியியல் கல்லூரிகள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஆா்வம் காட்டிவருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டின்கீழ் 70 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Please Comment