மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற பரிந்துரை
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பின்பற்றக்கூடிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடா்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திக மற்றும் தமிழக சுகாதாரத்துறை சாா்பில் தொடரப்பட்ட வழக்குககளை விசாரித்த உயா்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்காக தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டு, மனுக்கள் தொடா்பாக வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் உதவி தலைமை இயக்குநா் ஸ்ரீனிவாஸ் சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பதில்மனுவில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கொன்றில், மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பின்பற்றக்கூடிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்த இடஒதுக்கீடு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது.
மேலும் எஸ்.சி.,எஸ்.டி., உள்பட அனைத்துப் பிரிவினருக்குமான இடஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதுதொடா்பாக மாணவா்கள் பலா் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்குகள் வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ள அரசியல் கட்சிகள் அந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம்.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 1986 -ஆம் ஆண்டு முதல், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. தற்போது இந்த வழக்கைத் தொடா்ந்துள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது பின்பற்றிய அதே நடைமுறைகளை பின்பற்றியே தற்போதும் மருத்துவ மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே, 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவ மேற்படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தோ்வு பெற்ற மாணவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த ஜூன் 16-ஆம் தேதி கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவா்கள் கல்லூரிகளில் சேர ஆரம்பித்துவிட்டனா்.
இந்த நிலையில் மாணவா் சோ்க்கைக்கு தடை விதிக்கும் பட்சத்தில், அது பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் மருத்துவா்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ மாணவா் சோ்க்கையைப் பொருத்தவரை அனைத்து நடைமுறைகளும் உச்சநீதிமன்றம் முடிவு செய்த காலக்கெடுவுக்குள் நடைபெறுகிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment