தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை "கார் இல்லா ஞாயிறு' என்ற நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
மத்திய அரசின் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் இடம்பெற்றுள்ள தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் இல்லாத நகரம், சுகாதாரமான நகரம் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கார் இல்லா ஞாயிறு என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்காக அந்த சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவும் தங்களது இல்லங்களில் இருந்து சைக்கிளை ஓட்டியபடி நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குச் சென்றனர். தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் பிரசாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, துணை ஆட்சியர்கள் லாவண்யா, சத்யா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, மாநகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆண் அதிகாரிகள் ஓர் அணியாகவும், ஆட்சியரின் மனைவி அட்யஷா நந்தூரி தலைமையில் பெண் அதிகாரிகள் ஓர் அணியாகவும் பங்கேற்ற கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இரண்டு முறை நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆட்சியர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
அதன் தொடர்ச்சியாக, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர், உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சைக்கிளை ஓட்டியபடி சிறிது தொலைவு சென்றனர். அவர்களுடன் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கபடி, கோ-கோ, வாலிபால், டென்னிகாய்ட், ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றன. அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்ட சிறப்பு நடனமும் நடைபெற்றது.
பொதுமக்களை மகிழ்விப்பது, உடல் ஆரோக்கியத்தை பேணுவது, காவல் துறையினருடன் நட்புடன் பழகுவது என்ற நோக்கத்துக்காக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. இதில் ஆயுதப்படை போலீஸார், மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினரே அதிகளவு காணப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது சனிக்கிழமையும் இந்த நிகழ்ச்சியை நடத்த காவல் துறை தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அதிகளவு கலந்து கொள்ள முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாநகாரட்சி ஆணையர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 50 சைக்கிள்கள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்; அந்த சைக்கிளை பயன்படுத்தி கடற்கரை சாலையில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், போட்டியில் பங்கேற்ற ஒரு பெண்ணுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சரியான சிகிச்சை பெற முடியாமல் தவித்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது முதலுதவி, தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தால் நல்லது என நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
தொடர்ந்து அனைத்து வாரங்களிலும் இதுபோன்று நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் பங்கேற்கும் வகையில் போட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் சிறு சிறு விளையாட்டுகளை நடத்தி பரிசுகளை வழங்கி மக்களை உற்சாகப்படுத்த முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நேரம் நீட்டிக்கப்படும்: ஆட்சியர்
கார் இல்லா ஞாயிறு கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியது:
சாலைப் பாதுகாப்பு, பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மூலம் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்துகிறோம். இரண்டு மணி நேரம் என்ற கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சிக்கான நேரத்தை நீட்டிப்பு செய்ய மக்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, இனி வரும் காலங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்கான நேரத்தை அதிகப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
Please Comment