முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் 1300 பேருக்கு விருதுகளை பள்ளிக் கல்வித்துறை வழங்குகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான விருதுகள் நாளை சென்னையில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்குகிறார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்கள் 363 பேர், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கு விருதுகள் வழங்கப்படும்.
அத்துடன் 36.50 கிராம் எடையில் வெள்ளியிலான மெடல், ரொக்கம் ₹10 ஆயிரம், நற்சான்று ஆகியவை வழங்கப்படுகிறது.மேலும், தமிழக பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்டம்தோறும் 10ம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை சேர்ந்த தலா 15 மாணவர்கள் என்ற வீதத்தில் மொத்தம் 960 மாணவர்கள் காமராஜர் விருது பெறுகின்றனர். தூய்மைப்பள்ளிகளுக்கான விருது 40 பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 3 மணி அளவில் இந்த விருது வழங்கும் விழா தொடங்கும். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள், சமக்ர சிகபஷா மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

No comments:
Post a Comment
Please Comment