மக்கும் பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் மாசுக்குத் தீர்வாக அமையுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மக்கும் பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் மாசுக்குத் தீர்வாக அமையுமா?


பெங்களூருவைச் சேர்ந்த ‘பிளாஸ்டோபேக்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகம்மது அஷ்ஃபக், பயோபிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறார். 






இந்தத் தொழிலில் அவர் நுழைவதற்குக் காரணமான சம்பவம் நெகிழ்ச்சியானது. பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவந்தவர் அவர். 2011-ல் ஒரு நாள் வெளியிலிருந்து வீடு திரும்பிய அஷ்ஃபக்கைப் பார்த்து அவருடைய 12 வயது மகள் ஒரு கேள்வி கேட்டார்; “அப்பா நீங்கள் பிளாஸ்டிக் தயாரித்து நகரையே மாசுபடுத்துகிறீர்கள் அல்லவா?” என்றார். தன் மகள் இனி குற்றஉணர்வால் வேதனைப்படக் கூடாது. 





அவள் பெருமைப்படும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று உடனே முடிவெடுத்தார் அஷ்ஃபக். அதன் பிறகு, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, தானாகவே மக்கி சிதையக்கூடிய பிளாஸ்டிக்கை வணிகரீதியில் தயாரிக்கத் தொடங்கினார். அவருடைய நிறுவனத்தில் இப்போது தயாராகும் பிளாஸ்டிக்குகளில் 35% - மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் மக்கக்கூடியவை. மக்கக்கூடிய பிளாஸ்டிக்குகளைத் தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்துள்ள 16 இந்திய நிறுவனங்களில் இவரது ‘பிளாஸ்டோபேக்’ நிறுவனமும் ஒன்று. கேரி பேக்குகள், சமையலறைக் கத்திகள், லஞ்ச்-டிஃபன் டப்பிகள், குப்பைக்கூடைகள் போன்றவை இங்கு மக்கும் பிளாஸ்டிக்காகத் தயாரிக்கப்படுகின்றன. சிறு தொழிற்சாலைகளில் இந்த பிளாஸ்டிக்குகளை எளிதில் துணுக்குகளாக்கி ஆறு மாதங்களுக்குள் மக்கச் செய்துவிடலாம். இந்தியாவுக்குப் பேராபத்தாகிவரும் பிளாஸ்டிக் பிரச்சினைக்கு இது நம்பகமான தீர்வாக உருவெடுத்துள்ளது. 





 பெரிய சவால் இந்த பயோபிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு இப்போதுள்ள பெரிய சவால், வாடிக்கையாளர்களைப் பிடிப்பதுதான். இப்போதைக்கு இந்த பயோபிளாஸ்டிக்குகளை உணவுப் பயிர்களிலிருந்துதான் தயாரிக்கின்றனர். எனவே, உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கிறது. பழைய பிளாஸ்டிக் பையைவிட உயிரி பிளாஸ்டிக் பையின் விலை மும்மடங்காக இருக்கிறது. 50 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு 2016-ல் பொதுவான தடைவிதிக்கப்பட்டாலும், பெரும்பாலான நகராட்சிகள் இதை முழுமையாக அமல்படுத்தவில்லை. எனவே, பயோபிளாஸ்டிக்குக்கு மாற வேண்டிய கட்டாயம் மக்களுக்கில்லை. அடுத்ததாக, பயோபிளாஸ்டிக்காக இருந்தாலும் அதையும் சேகரித்து சிதைக்க தொழிற்சாலை அவசியம். 






இவை நாடு முழுக்க ஏற்பட்டால்தான் சிதைத்து மக்கவைக்க முடியும். 12-க்கும் மேற்பட்ட வெவ்வேறு தீவனங்களைப் பயன்படுத்தி பயோபிளாஸ்டிக் தயாரிக்க முடியும். ‘பாலிலேக்டிக்ஆசிட்’ (பிஎல்ஏ) என்ற பயோபிளாஸ்டிக் இப்போது பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து எடுக்கும் மாவிலிருந்து பயோபிளாஸ்டிக்கை ஜெர்மனியின் ‘பிஏஎஸ்எஃப்’, அமெரிக்காவின் ‘நேச்சர்வொர்க்ஸ்’ நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த பிஎல்ஏவை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. வேறு இடுபொருட்களைச் சேர்த்து கேரி பேக்குகள், குப்பைக்கூடைகள், சமையலறைக் கத்திகள் போன்றவற்றை இந்நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 







தீவனங்கள் விலை அதிகம் பயோபிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்றவை மலிவானவை அல்ல. 2016-ல் ஒரு கிலோ ‘பிஎல்ஏ’ 2 யூரோவுக்கு (ஒரு யூரோ = ரூ.80) கிடைத்தது. அடர்த்தி குறைவான ‘பாலிஎத்திலீன்’ 1,000 கிலோ 1,250 யூரோ முதல் 1,450 யூரோ விலையில் கிடைத்தது. விலை அதிகம் என்பது மட்டுமல்ல, மக்களுடைய பசியைத் தீர்க்கக்கூடிய உணவுப் பொருளை பிளாஸ்டிக் தயாரிப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கினால் நெருக்கடி ஏற்படும் என்று புவனேஸ்வரத்தில் உள்ள சிப்பெட் தலைவர் பி.எஸ்.ஜி.கிருஷ்ணன் எச்சரிக்கிறார். உணவுப் பயிர்களைப் பயன்படுத்துவதால் மட்டும் உற்பத்திச் செலவு அதிகரிக்கவில்லை. 



பயோபிளாஸ்டிக் தயாரிப்புக்கான எல்லா மூலப் பொருட்களும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, போக்குவரத்துச் செலவுடன் அரசு விதிக்கும் இறக்குமதி வரியும் சேர்ந்து இவற்றுக்கான விலையை அதிகப்படுத்திவிடுகின்றன என்கிறார் அஷ்ஃபக். பயோபிளாஸ்டிக்குக்கும் மரபு பிளாஸ்டிக்குக்கும் இடையிலான விலை வேறுபாடு, வரும் ஆண்டுகளில் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நிறுவனங்களே மூலப்பொருளைத் தயாரிக்கும்போது விலை குறையும். 2009 முதல் பயோபிளாஸ்டிக் தயாரிக்கும் அகமதாபாதின் ‘கிரீன்டயம்ஸ்’ பயோடெக் நிறுவனம், 2019 இறுதியில் மூலப்பொருளைத் தானே தயாரிக்கவிருக்கிறது என்று ‘கிரீன்டயம்ஸ்’ நிறுவனர் தீபக் சங்வி தெரிவிக்கிறார். ஸ்டார்ச் அடிப்படையில் பயோபிளாஸ்டிக் தயாரிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை பெங்களூருவைச் சேர்ந்த ‘என்விகிரீன்’ நிறுவனம் ‘பேடண்ட்’ பதிவு செய்திருக்கிறது. 




மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்தும் காய்கறிகளின் எண்ணெயிலிருந்தும் தயாரிக்கப்படும் இந்த மூலப்பொருள் மிகச் சிறப்பாக இருக்கிறது என்கிறார் ‘என்விகிரீன்’ நிறுவனர் அஸ்வத் ஹெக்டே. இந்த பிளாஸ்டிக் சாதாரண சூழலில் தானாகவே சிதைந்துவிடுகிறது. இதிலிருந்து வேறு முறையில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குளிர்ந்த நீர், சுடுநீர் இரண்டிலும் கரைகிறது. மெலிதான பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குத் தடைவிதிக்கப்பட்டதால் தொழில் இழந்த இந்திய பிளாஸ்டிக் தயாரிப்பாளர்களுக்கு இந்த மூலப்பொருளையும் தயாரிப்புத் தொழில்நுட்பத்தையும் விற்கத் திட்டமிட்டுவருகிறார் ஹெக்டே. உள்நாட்டிலேயே தயாரிப்பதால் இறக்குமதியாகும் மூலப்பொருளைவிடக் குறைந்த விலையில் விற்க முடிகிறது. வரும் ஆண்டுகளில் மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தியை அதிகரிக்கும்போது மூலப்பொருளின் விலை மேலும் குறையும் என்கிறார் ஹெக்டே. சர்வதேச அளவிலும் பயோபிளாஸ்டிக் தயாரிப்பு தொடர்பாக ஆராய்ச்சிகள் நடக்கின்றன. 




இதன் விளைவாக, மூலப்பொருளின் விலை உலக அளவிலும் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவுப்பொருள் அல்லாதவற்றிலிருந்து தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவின் ‘ரென்மேடிக்ஸ்’ என்ற நிறுவனம் அரளிபோன்ற செடிகள், கோரைப் புற்கள், மரத்தூள் ஆகியவற்றிலிருந்து பயோபிளாஸ்டிக் மூலப்பொருளைத் தயாரிக்கும் செலவு குறைந்த வழிமுறையை உருவாக்கியிருக்கிறது. அரசு ஆதரவு தேவை ஐரோப்பிய ஒன்றியத்தின் 2015 கொள்கைப்படி மட்டுமே இதுவரை இத்துறையில் இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதிக உற்பத்திச் செலவு, தொழில்நுட்பத் தடைகள் பெரிய சவால்களாக இருக்கின்றன. 





இத்துறை தானாகவே வணிகரீதியாக எழுந்து நின்றுவிட முடியாது. பிளாஸ்டிக்கை ஒழித்துச் சூழலைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்ற இந்திய அரசும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தில் மானியம் தர வேண்டும். பொதுச் சரக்கு, சேவை வரி மிதமாக விதிக்கப்பட வேண்டும். இறக்குமதி வரியும் குறைக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால் பயோபிளாஸ்டிக் துறைக்கு இந்தியாவில் எதிர்காலம் இருக்காது என்கிறார் சங்வி. நகராட்சி மன்ற அதிகாரிகளுக்கு இத்துறையை வளர்ப்பதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. முதலில் அவர்கள் பிளாஸ்டிக்குகளை மக்கவைக்கும் தொழில் பிரிவுகளைத் தங்களுடைய பகுதிகளில் நிறுவ வேண்டும். மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீதான தடையை ஒழுங்காக அமல்படுத்த வேண்டும். வியாபாரிகள், மக்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காகத் தடையை விலக்கிக்கொள்ளக் கூடாது. பண்ணைகளில் பிளாஸ்டிக் ஷீட்டுகளை விரித்துத் தண்ணீர் பூமியில் உறிஞ்சப்படாமலும், களை வளராமலும் சில பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். சாகுபடி முடிந்ததும் பிளாஸ்டிக்கைத் தரையிலிருந்து உரித்து எடுக்கிறார்கள், 




இதற்கு ஊதியம் தர வேண்டியிருக்கிறது. பயோபிளாஸ்டிக்கில் இது இல்லை. இப்போது உலக பிளாஸ்டிக் பயன்பாட்டில் 2% மட்டுமே பயோபிளாஸ்டிக்காக இருக்கிறது. பயோபிளாஸ்டிக்குகள் பயன் தந்தாலும் சுற்றுச்சூழல் மாசை நீக்கும் ஒரே தீர்வு அல்ல. பிளாஸ்டிக்கின் கேடு குறித்து மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இல்லை என்பதுதான் இன்றைய பிரச்சினை. மக்கும் குப்பையையும் மக்காத குப்பையையும் இனம் பிரிக்காமல் அவர்கள்தான் பெரும் தீங்கை இழைக்கிறார்கள். மக்காத பிளாஸ்டிக்கை இனம் பிரித்து அரைத்து மறுசுழற்சிக்கு அளித்திருந்தால் இது பூதாகாரமாக வளர்ந்திருக்காது. ஆலைகளில் பிளாஸ்டிக்குகளை இட்டு நொறுக்கி, அரைத்து மக்கவைப்பது எளிது. 






அப்படியே வெட்டவெளியில் வீசப்படும் பிளாஸ்டிக்குகள்தான் ஆண்டுகள் பல ஆனாலும் மக்காமல் தீங்கு விளைவிக்கும். பயோபிளாஸ்டிக்கும் இப்படியே வெட்டவெளியில் வீசப்பட்டால் பல நூற்றாண்டுகள் இல்லாவிட்டாலும் பல ஆண்டுகளுக்கு அப்படியே கிடந்து மழைநீர் வடிகால் போன்றவற்றை அடைக்கும் என்று எச்சரிக்கிறார் சிப்பெட்டின் கிருஷ்ணன். அரசின் கைகளில்தான் தீர்வு உள்ளது! ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரிசிறு தொழிற்சாலைகளில் பயோபிளாஸ்டிக்குகளை எளிதில் துணுக்குகளாக்கி ஆறு மாதங்களுக்குள் மக்கச் செய்துவிடலாம். இந்தியாவுக்குப் பேராபத்தாகிவரும் பிளாஸ்டிக் பிரச்சினையை எதிர்கொள்ள இது உதவும்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment