ஆசிரியர் பணியைத் துறந்து செக்கு எண்ணெய் தொழிலில் சாதிக்கும் மனிதர்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர் பணியைத் துறந்து செக்கு எண்ணெய் தொழிலில் சாதிக்கும் மனிதர்!

15 வருடங்கள் பார்த்த பேராசிரியர் வேலை போரடிக்க, மாட்டுச் செக்கு வைத்து எண்ணெய் பிழியும் தொழிலுக்கு மாறி அசத்தி வருகிறார் கரூரைச் சேர்ந்த குணசேகரன்.




கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் நொய்யல் குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர்தான் குணசேகரன். கரூர் டு ஈரோடு சாலை ஓரத்திலேயே இருக்கும் தனது வீட்டுக்கு முன்பு இரும்பு ஷெட் அமைத்து, கல் செக்கை நிறுவி, காங்கேயம் காளைகளைப் பூட்டி, செக்கில் பாரம்பர்ய முறையில் எண்ணெய் ஆட்டுகிறார். அவரிடம் பேசினோம்.
``உண்மையில் ஆசிரியர் பணியில் உள்ள ஆசையால்தான் கடந்த 2001-ம் வருஷம் கரூர்ல உள்ள கல்லூரியில் பணிக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு, ஈரோட்டுல உள்ள கல்லூரின்னு 2016 வரை கல்லூரிப் பேராசிரியரா பணிபுரிந்தேன். `குறைந்த சம்பளம்; அதிக வேலை'ன்னு அந்த வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. 'போதுமடா சாமி'ன்னு அந்த வேலையை உதறிட்டு, எங்களுக்கு இருந்த மூன்று ஏக்கர் நிலத்துல கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, நெல், கடலைன்னு இயற்கை முறையில் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். அப்தோதான் பசுமை விகடன்ல திருநெல்வேலி பகுதியில் மாட்டுச் செக்கு மூலம் எண்ணெய் ஆட்டும் சீனிவாசன்ங்கிறவரை பத்தி செய்தி வந்துருச்சு.





அதைப் படிச்சதும் எனக்கும் மாட்டுச் செக்கு மூலம் பாரம்பர்ய முறையில் எண்ணெய் ஆட்டனும்ங்கிற உந்துதல் வந்தது. அவர்கிட்ட பேசி தகவல்களை சேகரிச்சுக்கிட்டேன். அதுவரை எனக்கு செக்குப் பற்றி அடிப்படைகூடத் தெரியாது. ஈரோட்டுல இருந்து தச்சர் ஒருவரை அழைச்சுக்கிட்டு வந்து வாகை மரங்கள்ல உலக்கை, வீச்சுப் பலகை, கொக்கிக் கட்டை, கருது கால், நுகத்தடிகளைச் செய்தேன். உறவினர் ஒருவர் வீட்டில சும்மா மூலையில கிடந்த 50 ஆண்டுகள் பழைமையான கல் உரலை வாங்கிட்டு வந்தேன். செக்கை ஆட்ட ஒரு லட்சத்துக்கு ஒரு ஜோடி காங்கேயம் காளைகளை வாங்கினேன்.

வீட்டுக்கு முன்னாடிதான் செக்கை அமைச்சு, அதன் மேலே இரும்பில் ஷெட் அமைத்தேன். எல்லாம் சேர்த்து நான்கு லட்சம் வரை செலவானது. 2017 ஜூலையில் செக் ஓட்ட ஆரம்பித்தோம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்ன்னு நான்கு எண்ணெய்களை ஆட்டினோம். அதை எங்க வீட்டுக்கு முகப்பிலேயே மகள் யாழ் பெயரில் சொந்த கடை ஆரம்பித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தோம். ஒருகாலத்தில் மாட்டுச் செக்கு வைத்திருந்தவர்களே, `ஏன் இந்த வேண்டாத வேலை'ன்னு கேட்டாங்க. நான் மனம் தளரலை. என் மனைவியும் தந்தையும் ஒத்தாசை பண்ணினாங்க.
ஆரம்பத்துல, மார்க்கெட் பண்ண சிரமப்பட்டோம். ஆனா, இப்போ வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கிற அளவுக்கு முன்னேறிட்டோம். லோக்கல் விவசாயிகளிடமும் மொத்த வியாபாரிகளிடமும் தேவைக்குத் தக்கன எள், நிலக்கடலை, ஆமணக்கு, தேங்காய்களை வாங்கிக்குவோம். அதை வச்சு தினமும் ஒன்றை ஆட்டுவோம். தினமும் காலையில் நான்கு மணி நேரமும் மாலையில் நான்கு மணி நேரம் மட்டுமே செக்கை இயக்குவோம். எல்லா செலவும் போக மாதத்துக்கு எண்ணெய், புண்ணாக்கு விற்பனை மூலம் 25,000 வரை வருமானம் கிடைக்குது. ஆசிரியர் வேலையில் கிடைத்ததைவிட அதிக வருமானம், அதுவும் வீட்டிலேயே நமக்கு நாமே ராஜாங்கிற மாதிரி சொந்த தொழிலில் கிடைக்கிறது. அதனால், நிம்மதியாக இருக்கேன்" என்றார் மகிழ்ச்சியாக!துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment