ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேலை இழக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 2011 ம் ஆண்டு நவம்பர் 15 ம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆசிரியர்கள் 2016 ம் ஆண்டு நவம்பர் 15 ம் தேதிக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டதால் அனைத்து ஆசிரியர்களாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதையடுத்து இந்த கால அவகாசம் இந்தாண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்னும் இரண்டரை மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும் இன்று வரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
வரும் மார்ச் 31 ம் தேதிக்குள் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேலை இழப்பது உறுதி. எனவே வேலை இழக்கும் அரசு ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தி, உடனடியாக முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் சில ஆண்டுகள் நீட்டித்து, அதற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுதுவதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment