பள்ளி மாணவர்கள் இடை நிற்றலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - இந்தியாவிலேயே தமிழகம்
முதலிடம்
நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புகளில் தேர்வில் தோல்வி மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக பல மாணவ-மாணவிகள் பாதியிலேயே பள்ளி கல்வியை தொடராமல் நின்றுவிடுகின்றனர்.
இதுதொடர்பான ஆய்வை கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை நடத்தியது என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
தற்போது வெளியாகி உள்ள இந்த ஆய்வு முடிவில், மாணவ-மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 86.2 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் 85.8 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 85.6 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - தொடரும் தேடுதல் பணி
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் 13 பேருடன், திங்களன்று காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தைத் தேடும் பணியில் இந்தியக் கடற்படை விமானம் ஒன்றும் இஸ்ரோவின் செயற்கைகோள்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்த விமானத்தைத் தரை வழியாகத் தேடும் பணியில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையும், மாநில காவல் துறையும் ஈடுபட்டுள்ளன.
தி இந்து - மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு
சிகிச்சை மையம்
தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பால்மாற்று அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்கும் இந்த மையம் வெள்ளிதோறும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும்.
தினமணி - ராகுல் காந்தி குடியுரிமை
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அளிக்க இந்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்று அந்நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்றின் ஆவணங்களில் கூறப்பட்டிருப்பது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்திருந்தார்.
தாம் பிரிட்டன் குடியுரிமை பெறவில்லை என்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவிடம் ராகுல் விளக்கம் அளித்திருந்தார்.
இந்தியக் குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் தேர்தல்களில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:
Post a Comment
Please Comment