தெரியுமோ, தெரியாதோ... களமிறங்க வேண்டிய சூழ்நிலை:
வீட்டு உபயோக பொருட்கள் பழுதானால் மெனக்கெடும் குடும்ப தலைவர்கள்
பெண்கள் ஆச்சரியம்
வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகிவிட்டால் அதனை சரி செய்யும் பணியில் குடும்ப தலைவர்கள் மெனக்கெடுவதை பார்க்க முடிகிறது. கணவர்களின் அபார திறமையை கண்டு பெண்கள் ஆச்சரியம் கொள்கிறார்கள்.
மனைவிமார்களின் குடைச்சல்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு இருக்கின்றன. மக்களும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். மக்கள் வீடுகளிலேயே இருப்பதால் மின் சாதனங்களும், வீட்டு உபயோக பொருட்களும் ஓய்வின்றின் உழைப்பை கொட்டி வருகின்றன. தொடர்ந்து ஓடிக்கொண்டு இருப்பதால் சில சமயம் மின்சாதனங்களில் லேசான பழுதுகள் ஏற்படுகிறது.
மின் சாதனங்களை பழுது பார்க்க அல்லது கையாள தெரிந்த நபர்கள் பிரச்சினையில்லாமல் வீட்டில் உள்ள உபகரணங்கள் மூலம் பழுதை சரி செய்துவிடுகிறார்கள். ஆனால் மின் வேலை தெரியாதோர் மாட்டிக்கொண்டு திணறுவதை அனேக வீடுகளில் பார்க்க முடிகிறது.
இதனால் பயனற்று கிடக்கும் அப்பொருட்களை பார்க்கும்போதெல்லாம் ‘இதை சரிபண்ண முடியுமா? பாருங்களேன்’ என்று மனைவிமார்கள் குடைச்சல் கொடுத்துக்கொண்டு வரும் போக்கும் பலரது வீடுகளில் காணமுடிகிறது.
பழுது சரி செய்யும் பணியில்...
ஏற்கனவே மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடைகள் மூடப்பட்டு உள்ளன. அதேவேளை கொரோனா காரணமாக வேலையாட்களை வீட்டில் அனுமதிக்கவும் மக்கள் பயப்படுகிறார்கள். அதேசமயம் மனைவியின் திட்டுகளையும் சமாளிக்க முடியாமல் போகிறது. இதனால் தெரியுமோ, தெரியாதோ வீட்டு உபயோக பொருட்கள் மீதான பழுதை சரிசெய்யும் பணியில் வேறு வழியின்றி குடும்ப தலைவர்கள் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
ஏராளமான வீடுகளில் மின்விசிறி, கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், டி.வி. ரிமோட்கள், மின் அடுப்புகள் போன்ற சாதனங்களில் ஏற்பட்டிருக்கும் பழுதை சரிசெய்யும் பணியில் அந்தந்த குடும்ப தலைவர்கள் மெனக்கெடுவதை பார்க்க முடிகிறது. கையில் ஸ்பேனர் உள்ளிட்ட கருவிகளை கொண்டு தனக்கு தெரிந்த வரையில் இந்த பணிகளில் ஆண்கள் ஈடுபடுகிறார்கள்.
அவ்வப்போது யூ-டியூப் போன்ற சமூக வலைதளம் மூலமாக மின் சாதனங்களை கையாளுவது குறித்து பார்த்து தெரிந்துகொண்டு, அதன்படி பணிகளை கையாளுகிறார்கள். இதுதவிர வீட்டில் குழாய் உடைப்பு, சுவிட்ச் போர்டு பழுது உள்ளிட்ட பணிகளிலும் ஆண்கள் சீரியசாக ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
வியப்பும், ஆச்சரியமும்...
மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் கணவர்கள் மல்லுக்கட்டுவதை பார்த்து மனைவி வியந்து போகிறார்கள். சில சமயம் பழுது நீக்கும் முயற்சி வெற்றிபெறும் போது, ‘உங்களுக்குள் இவ்வளவு திறமையா?’, என்று இல்லத்தரசிகள் ஆச்சரியப்பட்டு போகிறார்கள். பழுதை சரிசெய்ய முடியாமல் போனால், ‘நீங்கள் எதுக்குமே லாயிக்கு இல்லை’, என்று வசைபாட தொடங்குகிறார்கள்.
இதனால் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆண்கள் தள்ளப்படுகிறார்கள்.
சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ள அப்பாக்களுக்கு ரிமோட், செல்போன், பொம்மை கார்கள், சைக்கிள் போன்றவற்றை சரிசெய்யவே நேரம் போதவில்லை.
இதனால் ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ள ஆண்கள் படாதபாடு படுகிறார்கள். எது எப்படியோ... ஊரடங்கு முடியும்போது மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கையாளுவதில் ஏராளமானோர் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

No comments:
Post a Comment
Please Comment